தேடுதல்

காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத் தாக்குதல்கள். காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத் தாக்குதல்கள். 

இராணுவத்தில் AI பயன்பாட்டை கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு அழைப்பு!

போர்க்களத்தில் செயற்கை நுண்ணறிவின் விரிவடைந்த பயன்பாடு மனித பொறுப்பையும் வெளிப்படைத்தன்மையையும் பலவீனப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ள சர்வதேச பிரகடனம், உலகளாவிய சட்டங்களுக்கு இணங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுகளையும் தொழில்நுட்ப நிறுவனங்களையும் வலியுறுத்தியுள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

போர்க்களத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து வருவதால், இராணுவ நடவடிக்கைகள் அதிவேகத்திலும் மிகப்பெரிய அளவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் முடிவுகளை எடுப்பதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு அதிகரித்து வருவதால், உலக திருஅவைகளின் பேரவையானது (WCC), 225 இதர அமைப்புகள், நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து, போரில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்தப் பிரகடனம் ஜெனீவாவில் ஜூன் 15லிருந்து 17 வரை இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் இராணுவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்தும் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அதன் விளைவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இராணுவத்தில் இலக்கை நிர்ணயிக்கும் அமைப்பில் (kill chain) செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை ஈடுபடுத்துவதை நிறுத்துமாறும், பிற செயற்கை நுண்ணறிவு கருவிகள் உலகளாவிய மனிதநேய மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் அரசுகளுக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இந்த பிரகடனம் அழைப்பு விடுத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இலக்கு அடையாளம் காணும் மற்றும் தாக்குதல் முடிவுகளை வழிநடத்தும் அமைப்புகள், உயிர் பறிக்கும் நடவடிக்கைகளில் மனிதனின் நேரடி பொறுப்பையும் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் பலவீனப்படுத்துகின்றன என்று பிரகடனத்தில் கையொப்பமிட்டவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், இத்தகைய அமைப்புகள் தவறுகள் மற்றும் சாத்தியமான போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை மங்கச் செய்வதோடு, அவற்றின் முடிவுகள் முற்றிலும் நடுநிலையானவை என்ற தவறான எண்ணத்தையும் உருவாக்குகின்றன என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"முன்னணியில் உள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மனிதனால் மேற்பார்வை செய்ய இயலாத அளவிற்கு அதிவேகத்திலும் அதிக அளவிலும் இலக்குகளை உருவாக்கவும் முன்னிலைப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன" என்று அவர்கள் வாதிட்டுள்ளனர்.

நம்பகத்தன்மையற்ற அல்லது பாரபட்சமான தரவுகள் குறித்தும் இந்தப் பிரகடனம் கவலைகளை எழுப்பியுள்ளது. இவை மனித உரிமை மீறல்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போரில் வேறுபாடு, விகிதாச்சாரம் மற்றும் முன்னெச்சரிக்கை கொள்கைகளை மீறுவதற்கான ஆபத்தை  அதிகரிக்கக்கூடும் என்றும் இந்தப் பிரகடனம் எச்சரித்துள்ளது.

இது போன்ற நடைமுறைகளை "மனிதாபிமானமற்றது" என்று வர்ணிக்கும் வல்லுநர்கள், "மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட முடிவுகளை ஒருபோதும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பரிந்துரைகளாக சுருக்கக்கூடாது" என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இராணுவ இலக்குகளைத் தீர்மானிப்பதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்குமாறும், உலகளாவிய சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்யுமாறும் அரசுகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளையில், சட்டத்திற்குப் புறம்பான இராணுவ நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் ஒப்பந்தங்களைத் தவிர்க்குமாறும் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

17 ஜூன் 2026, 12:51