தேடுதல்

ஐரோப்பிய ஆயர் பேரவை ஐரோப்பிய ஆயர் பேரவை 

இன்றைய ஐரோப்பாவிற்கு மக்களுடன் பயணிக்கும் அருள்பணியாளர்கள் தேவை!

செர்பியாவின் பெல்கிரேடில் நடைபெற்ற ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் (CCEE) 53-வது ஆண்டுக் கூட்டம், “இன்றைய ஐரோப்பாவில் அருள்பணியாளர்களாக இருத்தல்: அழைத்தல் மற்றும் உருவாக்கம்” என்ற தலைப்பில் அருள்பணித்துவ உருவாக்கத்தின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை ஆராய்ந்தது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் (CCEE) பொதுச் செயலர்களின் 53-வது ஆண்டுக் கூட்டம், செர்பியாவின் பெல்கிரேடில் ஜூன் 14 முதல் 17 ஆம் தேதி வரை இடம்பெற்றது. "இன்றைய ஐரோப்பாவில் அருள்பணியாளர்களாக இருத்தல்: அழைத்தல் மற்றும் உருவாக்கம்" என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்தக் கூட்டம் சமகால ஐரோப்பாவில் அருள்பணித்துவப் பணி மற்றும் உருவாக்கத்தில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகளில் கவனம் செலுத்தியது.

இந்தக் கூட்டத்தில் தொடக்க உரை ஆற்றிய ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் தலைவர் பேராயர் கிண்டாரஸ் குருஷாஸ் அவர்கள், ஐரோப்பாவின் எதிர்காலத் திருஅவைப் பணிக்கு, மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து, கிறிஸ்துவின் அன்பையும் நற்செய்தியின் நம்பிக்கையையும் வாழ்வால் வெளிப்படுத்தும் அருள்பணியாளர்கள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இன்றைய பண்பாடு மற்றும் சமூகச் சவால்களுக்கு மத்தியில் அருள்பணித்துவத்தின் அழகை எடுத்துரைத்த பேரருள்திரு அல்போன்சோ அமரான்டே அவர்கள், கிறிஸ்துவுடனான ஒன்றிப்பு, மேய்ப்புப்பணி நெருக்கம் மற்றும் அருள்பணித்துவ சகோதரத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

உளவியலாளர் கியாரா டி'உர்பானோ அவர்கள், அருள்பணியாளர்கள் உண்மையான உறவுகளையும் தனிப்பட்ட முதிர்ச்சியையும் வளர்த்துக் கொள்ள உதவும் மன-உணர்ச்சி ரீதியான உருவாக்கத்தின் தேவையை வலியுறுத்தினார்.

மேலும் மைக்கேல் ஜியானோலா அவர்கள், அருள்பணித்துவ உருவாக்கம் என்பது இறைப்பணி மற்றும் சேவையின் மூலம் வாழ்நாள் முழுமைக்கும் தொடர்ந்து நிகழும் ஒரு செயல்முறை என்று அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இக்கூட்டத்தில் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் பல்வேறு பணிக்குழுக்களின் அறிக்கைகள், உள்ளூர் திருஅவைகளில் ஆயர் மாமன்ற முறை (synodality) குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் உக்ரைன் மக்களுடனான ஒற்றுமையின் வெளிப்பாடு ஆகியவையும் இடம்பெற்றன. இது ஆயுதங்களைக் கைவிட்ட மற்றும் ஆயுதங்களைக் கைவிடச் செய்யும் அமைதிக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்தது. இதன் அடுத்த கூட்டம் 2027 ஜூன் மாதம் சரஜெவோவில் இடம்பெறும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

19 ஜூன் 2026, 09:42