தேடுதல்

புனித ஹன்னிபால் மேரி டி பிரான்சியா அவர்கள் மறைந்த நூற்றாண்டு விழாவை திருஅவை கொண்டாடியது. புனித ஹன்னிபால் மேரி டி பிரான்சியா அவர்கள் மறைந்த நூற்றாண்டு விழாவை திருஅவை கொண்டாடியது. 

புனித ஹன்னிபால் மேரி டி பிரான்சியாவின் மறைந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!

இறைவேண்டல் மற்றும் ஏழைகளுக்கான சேவையில் முன்னோடியாகத் திகழ்ந்த புனித ஹன்னிபால் மேரி டி பிரான்சியா அவர்களின் மறைந்த நூற்றாண்டு விழாவை திருஅவை சிறப்பாகக் கொண்டாடியது. உரோம் மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளர் கர்தினால் பால்டாசரே ரெய்னா தலைமையில் இதற்கான சிறப்புத் திருப்பலியும், மலர் அஞ்சலியும், காவல் துறை இசைக்குழுவின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

இறைவேண்டல் மற்றும் ஏழைகளுக்கான சேவையை மேம்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்த புனித ஹன்னிபால் மேரி டி பிரான்சியா அவர்கள் மறைந்த நூற்றாண்டு விழாவை திருஅவை கொண்டாடியது.

இவ்விழாவின் ஒரு பகுதியாக உரோம் மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளரான கர்தினால் பால்டாசரே ரெய்னா அவர்கள் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இத்தாலிய பொருளாதாரக் குற்றங்களை கையாளும் காவல்துறையின் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட சமூகக் கொண்டாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன.

புனித ஹன்னிபால், இறை அழைத்தல்களைக் கடவுள் தந்த மாபெரும் கொடையாகக் கருதினார்; அவற்றை நாம் இடைவிடாத செபத்தின் மூலமே பாதுகாத்திட முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது ஆன்மீக வாழ்வு, நற்செய்தியில் இயேசு கிறிஸ்து வழங்கிய “கேளுங்கள்” என்ற கட்டளையை மையமாகக் கொண்டிருந்தது. குறிப்பாக, “அறுவடை மிகுதி, தொழிலாளர்களோ சிலர். எனவே, அறுவடைக்குத் தொழிலாளர்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் வேண்டுங்கள்” என்ற இறைவார்த்தையின்படியே அவர் தன் வாழ்வை அமைத்துக் கொண்டார்.

புனித  ஹன்னிபால் அவர்களின் வாழ்வு அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் திருஅவையில் உள்ள அனைவரின் இறையழைத்தல்களுக்காகவும் இறை வேண்டல் செய்ய நம்பிக்கையாளர்களை தூண்டியது.

1851 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள மெசினாவில் பிறந்த இவர், ஏழைகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும், கடினமான சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கும் உதவுவதற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தார். 1882 ஆம் ஆண்டு அந்தோனியன் ஆதரவற்றோர் இல்லங்களை நிறுவி, அவர்களுக்குப் பொருள் உதவி மட்டுமின்றி கல்வி, மாண்பு மற்றும் குடும்பச் சூழலையும் வழங்கினார்.

அவரது பணியைத் தொடர, 1887 ஆம் ஆண்டு இறை ஆர்வமுள்ள புதல்விகள் சபையையும், 1897 ஆம் ஆண்டு இயேசுவின் இருதய ரோகேஷனிஸ்ட் சபையையும் நிறுவினார். இன்று, இந்த இரண்டு சபைகளும் ஐந்து கண்டங்களில் சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

1927 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி அவர் மறைந்த நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், புனித ஹன்னிபாலின் பாரம்பரியம் உலகம் முழுவதும் நற்செய்தி அறிவிப்பு, பிறர ப்பணி மற்றும் இறையழைத்தல்களுக்காக இறைவேண்டல் செய்யும் திருஅவையின் பணிக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஜூன் 2026, 11:04