தேடுதல்

பயிற்சிப் பட்டறையில் உரையாடலை முன்னெடுக்கும் அருள்சகோதரி பிலோமேனா ஜப்பா. பயிற்சிப் பட்டறையில் உரையாடலை முன்னெடுக்கும் அருள்சகோதரி பிலோமேனா ஜப்பா. 

லைபீரியாவின் வாழ்வை மேம்படுத்தும் கத்தோலிக்கப் பள்ளிகள்

லைபீரியாவில் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் கத்தோலிக்கப் பள்ளிகள் கல்வி வளர்ச்சிக்கும் சமூக நிலைத்தன்மைக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. அருள்சகோதரி பிலோமினா தலைமையிலான கத்தோலிக்கக் கல்வி முயற்சிகள், பள்ளி நிர்வாகத்தை வலுப்படுத்துதல், ஆசிரியர் ஆதரவு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிசெய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

லைபீரியா நாட்டின் கல்வியை மேம்படுத்துவதில் கத்தோலிக்கத் திருஅவை முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய சமூகங்களில், கத்தோலிக்கப் பள்ளிகள் மோதல் மற்றும் கடினமான காலங்களிலும் நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மையின் புகலிடமாகத் திகழ்கின்றன.

கல்வியாளர்களால் நிரம்பிய தனது குடும்பத்தாலும், தனது இறை அழைப்பாலும் ஈர்க்கப்பட்ட அருள்சகோதரி பிலோமினா அவர்கள், திருக்குடும்ப துறவற சபையில் இணைந்தார். கல்வி, நம்பிக்கை உருவாக்கம், நலவாழ்வு மற்றும் மேய்ப்புப்பணி ஆகியவற்றின் மூலம் குடும்பங்களை வலுப்படுத்துவதே இந்த சபையின் நோக்கமாகும். மனித மாண்பைப் பாதுகாத்து உயர்த்துவதற்கும், சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் மக்களுக்குத் தன்னலமற்ற சேவையாற்றுவதற்கும் இத்துறவறச் சபை அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

கேப் பால்மாஸ் மறைமாவட்டத்தின் கல்வித்துறைச் செயலாளராகவும், கத்தோலிக்க கல்விக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றும் அருள்சகோதரி பிலோமினா அவர்கள், கத்தோலிக்கப் பள்ளிகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதோடு, ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு வழிகாட்டுதலும் ஆதரவும் வழங்கி வருகிறார். மேலும், பள்ளி நிர்வாகத்தை வலுப்படுத்துதல், குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை மேம்படுத்துதல் ஆகிய பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் குறைந்த கற்றல் வளங்கள் போன்ற லைபீரியாவின் தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும், கத்தோலிக்கப் பள்ளிகள் தொடர்ந்து தரமான கல்வியை வழங்குகின்றன, குறிப்பாக தொலைதூரப் பகுதிகளிலும் கல்வி எளிதில் கிடைக்கும் ஒன்றாக உள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்குதல், வலுவான குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பெண்கள், சிறுமிகள், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிசெய்தல் ஆகியவை அவசியம் என்று அருள்சகோதரி பிலோமினா வலியுறுத்தியுள்ளார்.

குடும்பங்களின் நிலைத்தன்மையே குழந்தைகள் இடைநிற்றலின்றி கல்வியைத் தொடர்வதற்கான அடித்தளம் என்பதை உணர்ந்துள்ள அருள்சகோதரி பிலோமினா, பங்குத்தளங்களில் பல்வேறு முன்முயற்சிகளை முன்னெடுத்து பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.

கடவுளின் அருளிலும், திருஅவை, அரசு, உள்ளூர் சமூகங்கள் மற்றும் பன்னாட்டு கூட்டாளர்களின் ஒத்துழைப்பிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ள அருள்சகோதரி பிலோமினா, கல்வித் திறன், அறநெறி மற்றும் சமூகப் பொறுப்புணர்வு மிக்க குடிமக்களை உருவாக்குவதன் மூலம் கத்தோலிக்கக் கல்வி லைபீரியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை தொடர்ந்து கட்டியெழுப்பும் என்ற உறுதியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

30 ஜூன் 2026, 11:39