நற்கருணை மற்றும் அன்னை மரியாளின் பக்தியே அருளாளர் நசரேனோவின் வலிமை!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
நற்கருணை ஆண்டவர்மீதும் அன்னை மரியாள்மீதும் கொண்ட ஆழ்ந்த பக்தியே அருளாளர் நசரேனோவின் மறைப்பணி மற்றும் மறைசாட்சிய வாழ்வின் அடித்தளமாக இருந்தது என்று கர்தினால் ஜெய்மி ஸ்பெங்க்லர் அவர்கள் கூறினார்.
பிரேசிலின் ஜௌருவில் இடம்பெற்ற அருளாளர் நசரேனோ லான்சியோட்டியின் அருளாளர் பட்ட விழாத் திருப்பலியில் மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறிய கர்தினால் ஸ்பெங்க்லர் அவர்கள், நற்செய்திக்காக தாய்நாடு மற்றும் குடும்பத்தை விட்டு பிரேசிலுக்கு வந்த அருள்பணி நசரேனோ, ஏழைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாகக் குறிப்பிட்டதுடன், குழந்தைகள் சுரண்டல், சிறார்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிராக அவர் துணிச்சலுடன் போராடியதையும் எடுத்துக்காட்டினார்.
மேலும் இந்தச் சேவைகளுக்குத் தேவையான ஆன்மீக வலிமையை நற்கருணை மற்றும் அன்னை மரியாளின் மாசற்ற இருதய பக்தியிலிருந்து அருள்பணி நசரேனோ பெற்றார் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் ஸ்பெங்க்லர் அவர்கள், திருஅவையின் வாழ்வின் அடிப்படைத் தூண்களாகிய இறைவார்த்தை, சகோதர ஒற்றுமை, நற்கருணை மற்றும் செப வாழ்வு ஆகியவற்றில் நிலைத்திருக்குமாறு நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
உலகின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் போர்களையும் வன்முறைகளையும் சுட்டிக்காட்டிய கர்தினால் ஸ்பெங்க்லர் அவர்கள், திருத்தந்தை வலியுறுத்துவதுபோல், திருஅவை ஒற்றுமை, உடன்பிறப்புத்தன்மை மற்றும் அமைதியைக் கட்டியெழுப்பும் பணியில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் எடுத்துக்காட்டினார்.
இறுதியாக அன்னை மரியாளின் வழிகாட்டுதலுடனும் நற்கருணை ஆண்டவரின் அருளுடனும் நம்பிக்கையாளர்கள் இறுதிவரை நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு கர்தினால் ஸ்பெங்க்லர் அவர்கள் தனது மறையுரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.