கர்தினால் ருகாம்பாவா கர்தினால் ருகாம்பாவா 

படுகொலை செய்யப்பட்ட ஆயர் ஓசோரியோவை நினைவுகூர்ந்த கர்தினால் ருகாம்பாவா

படுகொலை செய்யப்பட்ட குவேலிமானே ஆயர் ஓசோரியோ சிடோரா அஃபோன்சோ அவர்களை நினைவுகூர்ந்த கர்தினால் புரோட்டேஸ் ருகாம்பாவா அவர்கள், அவரை பணிவும் அர்ப்பணிப்பும் நிறைந்த மேய்ப்பராகப் புகழ்ந்ததுடன், அவருக்காக அனைவரும் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

மொசாம்பிக் நாட்டின் குவேலிமானே மறைமாவட்ட ஆயர் ஓசோரியோ சிடோரா அஃபோன்சோ IMC அவர்கள் ஜூன் 06, சனிக்கிழமையன்று,  கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தான்சானியாவின் தபோரா உயர் மறைமாவட்ட பேராயரான கர்தினால் புரோட்டேஸ் ருகாம்பாவா அவருக்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு உரோமையிலுள்ள நற்செய்தி அறிவிப்புப் பணிக்கான திருப்பீடத்துறையில் போர்ச்சுகீசிய மொழி பேசும் நாடுகளுக்கான பணிக்காக தந்தை ஓசோரியோ அவர்கள் இணைந்தபோது அவரை முதன்முதலாகச் சந்தித்ததை கர்தினால் நினைவுகூர்ந்தார்.

ஆயர் ஓசோரியோ அவர்களை  “கடவுளின் மனிதர், மென்மையானவர், பணிவானவர், அறிவும் பண்பும் நிறைந்த அருள்பணியாளர்” என்று வர்ணித்த கர்தினால் ருகாம்பாவா அவர்கள், அவர் எங்கு தேவைப்பட்டாலும் சேவை செய்யத் தயாராக இருந்த அர்ப்பணிப்புள்ள மறைப்பணியாளர் எனப் புகழாரம் சூட்டினார்.

கன்சொலாட்டா மறைப்பணியாளர்களின் உறுப்பினரான ஆயர் ஓசோரியோ அவர்கள்,  கடின உழைப்பாளி மட்டுமல்லாமல், தனது மேய்ப்புப்பணி அனுபவங்களையும் எண்ணங்களையும் திறந்த மனதுடன் பகிர்ந்துகொள்ளும் நெருங்கிய நண்பராகவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

குவேலிமானே ஆயராக நியமிக்கப்பட்ட பின்னரும், தனது பணியின் மகிழ்ச்சிகள் மற்றும் சவால்கள் குறித்து ஆயர் ஓசோரியோ அடிக்கடி தம்முடன் கலந்துரையாடியதாக தெரிவித்த கர்தினால் ருகாம்பாவா அவர்கள், மேலும், தனது மறைவுக்கு சில வாரங்களுக்கு முன்பு அனுப்பிய கடிதத்தில், கூட்டொருங்கியக்க, மறைப்பணித்தன்மை மற்றும் தன்னிறைவு கொண்ட திருஅவையை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஆயர் பகிர்ந்திருந்தார் என்றும் அவர் எடுத்துக்காட்டினார்.

இறுதியாக, ஆயர் ஓசோரியோ அவர்களுக்கு  ஆண்டவர் நித்திய இளைப்பாறுதலை வழங்கி, அவரை விண்ணக இல்லத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அனைவரையும் செபிக்குமாறு கர்தினால் ருகாம்பாவா அவர்கள் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

13 ஜூன் 2026, 11:37