உக்ரைன் வீரர் ஒருவருக்குச் சொந்தமான சிலுவையையும் தேசியக் கொடியையும் திருத்தந்தை பதினான்காம் லியோவுக்கு வழங்கிய கர்தினால். உக்ரைன் வீரர் ஒருவருக்குச் சொந்தமான சிலுவையையும் தேசியக் கொடியையும் திருத்தந்தை பதினான்காம் லியோவுக்கு வழங்கிய கர்தினால்.  (@Vatican Media)

உக்ரைன் வீரரின் சிலுவை மற்றும் தேசியக் கொடியை திருத்தந்தையிடம் வழங்கிய கர்தினால் பைச்சோக்!

உக்ரைனில் போரில் பங்கேற்ற வீரர் ஒருவருக்குச் சொந்தமான சிலுவை மற்றும் தேசியக் கொடியை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களிடம் வழங்கிய கர்தினால் மைக்கோலா பைச்சோக், உக்ரைன் தனிமையில் இல்லை என்பதையும், திருஅவையும் திருத்தந்தையும் அதன் பக்கமே நிற்கின்றனர் என்பதையும் வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

உக்ரைனில் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் பிறந்து தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் புனித பேதுரு மற்றும் புனித பவுல் கீழைத்திருஅவையின் (Eparchy) ஆயராகப் பணியாற்றி வரும் கர்தினால் மைக்கோலா பைச்சோக் அவர்கள், ஜூன் 24, புதன்கிழமை இடம்பெற்ற புதன் பொதுமறைக்கல்வி உரையின்நிறைவில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களைச் சந்தித்து, போரில் பங்கேற்ற உக்ரைனிய வீரர் ஒருவருக்குச் சொந்தமான சிலுவை மற்றும் உக்ரைன் தேசியக் கொடியை வழங்கினார்.

ஜூன் 26 முதல் 29 வரை வத்திக்கானில் நடைபெறும் சிறப்பு கர்தினால்கள் ஆலோசனைக் கூட்டத்தில் (Extraordinary Consistory) பங்கேற்பதற்காக உரோமில் தங்கியுள்ள கர்தினால் பைச்சோக் அவர்கள், இந்தப் பரிசின் முக்கியத்துவம், ஆலோசனைக் கூட்டம் குறித்த தனது எதிர்பார்ப்புகள் மற்றும் அமைதி தொடர்பான கலந்துரையாடல்களில் உக்ரைனிய திருஅவையின் பங்களிப்பு குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்துகொண்டார்.

போரில் மூன்று ஆண்டுகள் போரிட்ட அந்த வீரர், உக்ரைனின் துயரத்திற்கும் நம்பிக்கைக்கும் அடையாளமாக இந்தச் சின்னங்களை திருத்தந்தையிடம் ஒப்படைக்கக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் கர்தினால் பைச்சோக் அவற்றை திருத்தந்தையிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் திருத்தந்தை பதினான்காம் லியோவுக்கு நன்றி தெரிவித்த கர்தினால் பைச்சோக், "இந்த அன்பளிப்பு, உக்ரைன் தனியாக இல்லை என்றும், இறைவன் மற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் ஆதரவும் திருத்தந்தையின் உடனிருப்பும் உக்ரைனுக்கு உண்டு என்பதையும் உணர்த்துகிறது" என்றும் கூறியுள்ளார்.

சிறப்பு கர்தினால்கள் ஆலோசனைக் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த கர்தினால் மைக்கோலா பைச்சோக் அவர்கள், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் 'மகத்தான மானுடம்' (Magnifica Humanitas) என்ற திருத்தூது மடலை மையமாகக் கொண்ட கலந்துரையாடல்களில் இடம்பெறும் போர் மற்றும் அமைதி குறித்த சிந்தனைகள், உலகளாவிய மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளை முன்னெடுக்க திருஅவைக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

உக்ரைனின் திருஅவையின் அனுபவங்களை கத்தோலிக்கத் திருஅவையின் உயர்மட்டத்தில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கர்தினால் மைக்கோலா பைச்சோக் அவர்கள் தெரிவித்தார்.

அமைதியைக் கட்டமைப்பதில் உக்ரைனின் பங்களிப்பு குறித்துப் பேசிய கர்தினால் அவர்கள், "நாடு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தாலும், தனது இறையாண்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது" என்பதை வலியுறுத்தினார்.

போர் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பினரையும் பாதித்துள்ள ஆழமான உடல் மற்றும் உணர்ச்சிகரமான காயங்களை சுட்டிக்காட்டிய அவர், உணவு, தண்ணீர் மற்றும் ஆன்மீகப் பராமரிப்பு உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் உலகளாவிய கத்தோலிக்க திருஅவையையும் பாராட்டினார்.

புலம்பெயர்ந்த மக்களைப் பராமரித்தல், மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களைக் குணப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றில் உக்ரைனின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் பைச்சோக் அவர்கள், போரின் நீடித்த விளைவுகளை எதிர்கொள்வதில் இந்த அனுபவங்கள் உக்ரைனுக்கு மட்டுமல்லாமல், பரந்த இவ்வுலகிற்கும் உதவும் என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

27 ஜூன் 2026, 12:08