தேடுதல்

2026.06.03 60

குடிசைப் பகுதியில் தொடங்கி 138 நாடுகளுக்குப் பரவிய ஆன்மீகப் பயணம்!

நியோகேட்டகுமெனல் பாதை 138 நாடுகளில், 20,350க்கும் மேற்பட்ட சமூகங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மறைப்பணி குடும்பங்களுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

புதிதாக அல்லது மீண்டும் திருமுழுக்கு பெறுவதற்கு முன்னால் கத்தோலிக்க மறைக் கல்வியைக் கற்றுத் தங்களை ஆயத்தப்படுத்தும் நிலையின் (Neocatechumenal) 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக, மே 30, சனிக்கிழமையன்று மாட்ரிட்டில் உள்ள அல்முடேனா பேராலயத்தில் ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்கள் திரண்டனர்.

பலோமெராஸ் ஆல்டாஸின் ஏழை குடிசைப் பகுதிகளில் கிகோ அர்குவெல்லோ மற்றும் கார்மென் ஹெர்னாண்டஸ் ஆகியோரால் தொடங்கப்பட்டு அறுபது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அவர்களின் நற்செய்திப் பணிக்காக நன்றி தெரிவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் குடும்பங்கள், மறைப்பணியாளர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் திருஅவைத் தலைவர்கள் ஆகியோர் ஒன்று கூடினர்.

அப்போது இடம்பெற்ற திருப்பலியின் நிறைவில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. அதில் இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் தங்கள் மறைப்பணி அர்ப்பணிப்பைத் தொடருமாறு ஊக்குவித்துள்ள திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்பு என்பது ஒட்டுமொத்த திருஅவையின் அடிப்படைப் பணி என்பதை அவர்களுக்கு நினைவூட்டினார்.

இந்த இயக்கத்தின் தோற்றத்தைப் பற்றி எடுத்துரைத்த போது, 1960களில் மாட்ரிட்டில் உள்ள ஏழைகளிடையே ஒரு சிறிய மக்கள் குழு எவ்வாறு உருவானது என்பதையும், அது படிப்படியாக எவ்வாறு உலகளாவிய இயக்கமாக வளர்ந்தது என்பதையும் கிகோ அர்குவெல்லோ அவர்கள் எடுத்துக்கட்டினார்.

இன்று, நியோகேட்டகுமெனல் பாதை 138 நாடுகளில், 20,350க்கும் மேற்பட்ட சமூகங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மறைப்பணி குடும்பங்களுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொண்டாட்டத்தின் போது, கிறிஸ்தவ உருவாக்கம், அழைத்தல், குடும்ப வாழ்க்கை மற்றும் மறைப்பணி தொண்டு ஆகியவற்றிற்கு இந்த இயக்கம் அளித்துள்ள பங்களிப்புகளை திருஅவைத் தலைவர்கள் எடுத்துரைத்து இந்த பங்களிப்புகளுக்காக தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான கார்மென் ஹெர்னாண்டஸைப் புனிதராக  அறிவிப்பதற்கான பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லையும் இந்த ஒன்றுகூடலில் கொண்டாடினர். அவரைப் பற்றிய மறைமாவட்ட ஆய்வு நடவடிக்கைகள் மாட்ரிட்டில் ஜூன் 2 அன்று நிறைவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஜூன் 2026, 14:47