இன்றைய புனிதர்
புனித வளனார், அன்னை மரியாவின் அன்பு கணவரும், ஆண்டவர் இயேசுவின் வளர்ப்பு தந்தையுமான புனித யோசேப்பு ஆவார். இவர் அன்போடு “புனித வளனார்” என்று அழைக்கப்படுகிறார். இறை பக்தியும் மனித நேயமும் கொண்ட இவர், நாசரேத்தூரில் தச்சராகப் பணியாற்றி, அனைவருக்கும் உதவி செய்து வாழ்ந்தார்.
தனக்கு மனம் ஒப்பந்தம் செய்யப்பட்ட மரியா, ஆண்டவரின் அருளினால் கருவுற்றிருந்ததை அறிந்த அவர், மரியன்னையை கனிவோடு ஏற்றுக்கொண்டு அன்புடன் வாழ்ந்தார். எரோது அரசரிடமிருந்து குழந்தை இயேசுவையும் மரிய ன்னையையும் பல்வேறு துன்பங்களுக்கிடையே பாதுகாத்து வழிநடத்தினார்.
ஒரு சமயம், எருசலேம் நகர தேவாலயத்தில் இயேசு காணாமல் போனபோது, மரியன்னைக்கு ஆறுதல் கூறி, அவரைத் தேடி கண்டுபிடித்து மகிழ்ந்தார். சிறுவயதிலேயே இயேசுவுக்கு தச்சுத் தொழிலை கற்றுக் கொடுத்து, அன்போடு வளர்த்தார்.பின்னர், உடல் நலன் குறைந்து, இயேசுவின் மடியில் உயிர் துறந்தார் என்று பாரம்பரியம் கூறுகிறது.
இவ்வுலக மக்கள் கீழ்ப்படிதல், அமைதி காப்பது, அடக்கமாக பேசுதல் போன்ற நற்பண்புகளை புனித வளனாரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை புனித 23ஆம் அருளப்பர் கூறுகிறார்.
மக்களின் விண்ணப்பங்களை புறக்கணியாமல், இறைவனிடம் பரிந்துரைத்து பெற்றுத் தரும் நீதிமான் என புனித வளனார் போற்றப்படுகிறார். திரு அவை அவரை தொழிலாளர்களின் பாதுகாவலராக அறிவித்துள்ளது.
இன்று புனித வளனாரின் திருவிழாவை சிறப்பிக்கும் நாம், வேலை இல்லாமல் தவிக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களை இறைவன் ஆசீர்வதிக்கவும், அவர்களுக்கு அன்றாடம் வேலை கிடைக்கவும் ஜெபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்