மொசாம்பிக்: 80 ஆண்டு கால வரலாற்று ஆலயம் பயங்கரவாதிகளால் தீக்கிரை
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஏப்ரல் 30, வியாழனன்று, காபோ டெல்கடோ மாநிலத்தின் அன்குவாபே மாவட்டத்தில் உள்ள மேசா (Meza) பகுதியில் அமைந்துள்ள புனித லூயிஸ் மான்போர்ட் திருத்தலப் பங்கு, பயங்கரவாதத் தாக்குதலால் தகர்க்கப்பட்டதற்கு ஆயர் ஒசோரியோ சிட்டோரா அபோன்சோ அவர்கள் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். இந்தத் தாக்குதலின் போது குறைந்தது 22 பேர் கடத்தப்பட்டுள்ளனர்; இது உள்ளூர் மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பெய்ரா மறைமாவட்டத்தின் திருத்தூதரக நிர்வாகி செயல்படும் ஆயர் அவர்கள், மொசாம்பிக்கின் பெம்பா (Pemba) மறைமாவட்டத்தின் ஆயரான அந்தோனியோ ஜூலியாஸ் அவர்களையும், ஏழை எளிய மக்களுக்கான இறையியல் பள்ளிகளின் (Order of Poor Clerics Regular of the Mother of God of the Pious Schools) துறவற சபையைச் சேர்ந்த அருள்பணியாளர்களையும் நேரில் தொடர்புகொண்டு தனது உடனிருப்பை வெளிப்படுத்தியதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர்கள் ஆற்றிவரும் பணிகளுக்குத் தனது ஆதரவையும் வழங்கினார்.
அங்குள்ள மறைப்பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பது சற்று ஆறுதலாக இருந்தாலும், 1946-இல் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம் அழிக்கப்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ள ஆயர் அபோன்சோ அவர்கள், மேலும் இது அப்பகுதியைச் சேர்ந்த நம்பிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய இழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக பாதிக்கப்பட்ட மக்களுடன் கெலிமனே மறைமாவட்டம் எப்போதும் துணைநிற்கும் என்று கூறிய ஆயர் அவர்கள், வன்முறையைக் கைவிட்டு அமைதியை நிலைநாட்ட அழைப்பு விடுத்ததுடன், துயரப்படும் மக்களிடையே நம்பிக்கை வளரவும், ஒருமைப்பாடும் உண்மையான மனமாற்றமும் ஏற்படவும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்