குறள்வழி இறைமொழி
"குறள் வழி இறைமொழி" தொடரில் இணைந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளை எடுத்து, அதற்கு இணையான இறைவார்த்தைகளையும் தொகுத்து, அவற்றின் வழியே நாம் வாழ வேண்டிய வாழ்வியல் நெறிகளைப் பற்றி இந்த நிகழ்ச்சியில் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில், இன்று நமக்குத் தரப்பட்டிருக்கிற திருக்குறள்:
"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்."
இந்த உலகத்தில் பெரியவர்கள், சிறியவர்கள் என்று இரு வகையினர் இருக்கிறார்கள். பெரியவர்கள் யார்? மற்றவர்களால் செய்ய முடியாத, அரிய பெரிய செயல்களைச் செய்து முடிப்பவர்களே பெரியவர்கள். சாதாரண மக்கள் செய்யக்கூடிய வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், பலராலும் செய்ய இயலாத ஒரு செயலை, புதுமைத் தன்மையோடு, மன வலிமையோடு, மிகுந்த ஆர்வத்தோடு செய்து முடிப்பவரையே நாம் 'பெரியவர்' என்று அழைக்கிறோம். அப்படியென்றால் சிறியவர்கள் யார்? அப்படிப்பட்ட அரிய செயல்களைச் செய்வதற்கு எண்ணமோ, முயற்சியோ, திட்டமோ இல்லாதவர்களை நாம் 'சிறியவர்கள்' எனலாம். சிறியவர்கள் வழக்கமாக என்ன செய்கிறார்கள்? அவர்கள் உண்கிறார்கள், உறங்குகிறார்கள், தங்கள் குடும்பத்தின் நலனுக்காக மட்டும் உழைக்கிறார்கள், வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள், இறுதியில் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இவையெல்லாம் மிகச் சாதாரணமாக, இறையாட்சி சிந்தனையோ அல்லது அறநெறி உணர்வோ இல்லாத எவர் வேண்டுமானாலும் செய்யக்கூடியவை. ஆனால், இறையாட்சியின் உண்மையை அறிந்து கொண்டவர்கள் பெரியவர்களாக மாறுவார்கள்; மற்றவர்களால் செய்ய இயலாத அரிய செயல்களை அவர்கள் செய்து காட்டுவார்கள்.
இறைவனாகிய இயேசு தன் சீடர்களுக்கு இதே அறைகூவலைத்தான் விடுக்கிறார்: "யாராவது என்னைவிடத் தன் மனைவியையோ, மக்களையோ, உடன்பிறப்புகளையோ, நிலபுலன்களையோ, ஏன்... தன் உயிரையோ மேலானதாகக் கருதினால், அவர் எனக்கு உரியவர் அல்ல." (மத்தேயு 10:37).
மனைவி, மக்கள், குடும்பம், சொத்து, சொந்த உயிர் என்ற வட்டத்திற்குள்ளேயே சுருங்கி விடுகிறவர்கள் மிக எளிய மனிதர்கள், சிறியவர்கள். ஆனால், இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள், இறையாட்சிக் கொள்கையின் அடிப்படையில் வாழ்கிறவர்கள் சாதாரணமாக இருந்தால் போதாது. அவர்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடந்து நிற்க வேண்டும்.
போராளி சேகுவேரா "நீ ஒரு போராளியாக இருக்க விரும்பினால், குறைந்தது உன் உயிரையாவது கொடுக்கத் துணிய வேண்டும்" என்று குறிப்பிடுவார். உயிரைக் கொடுத்த பிறகு என்ன இருக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால், உயிரை விட மேலான கொள்கைகளும் லட்சியங்களும் இந்த உலகில் இருக்கின்றன. அந்த வகையில், இறையாட்சிக்கு முன்னால் நம் உயிர் என்பது மிகச் சாதாரணமானது. இறையாட்சியை நிறுவும் இறைமை உணர்வோடு வாழ்ந்திட, இந்த உயிரைக்கூட நாம் அர்ப்பணிக்கலாம்.
பாவேந்தர் பாரதிதாசன் அழகாகக் குறிப்பிடுவார்: "தாய்க்கும் தந்தைக்கும் மக்கள் என வாழும் எனக்கு, தமிழ்நாடு தனக்கு என்னால் தினையளவு நன்மை விளையும் என்றால், செத்து அழியும் நாள் எனக்கு திருநாளாகும்!" ஆக, பிறர் நலம், பொதுநலம், இறையாட்சி நலம் ஆகியவற்றிற்காகத் தங்களது உயிரைக் கூடக் கொடுப்பதற்கு முன்வருகிறவர்களே 'பெரியவர்களாகக்' கருதப்படுவார்கள்.
அன்பிற்கினியவர்களே, நாம் இந்த உலகில் 'பெரியவர்களாக' வாழ்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறோம். எனவே, அரிய பெரிய செயல்களைத் தியாக மனப்பான்மையோடு செய்வதற்கு முயற்சி எடுப்போம். அதற்கான திட்டங்களை நம் உள்ளத்தில் தீட்டுவோம்; இறைவனது அருளைப் பெறுவோம்.
வணக்கம், நன்றி!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்