குறள்வழி இறைமொழி குறள்வழி இறைமொழி   (©Verbo Divino)

குறள்வழி இறைமொழி

அன்னை மரியா தன் மகனையே உலகுக்கு உணவாக (அமிழ்தமாக) வழங்கியது போல, வானிலிருந்து பொழியும் மாரியும் உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் அமிழ்தமாகத் திகழ்கிறது.

அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்

குறள்வழி இறைமொழி என்ற இந்தத் தொடரில், திருக்குறளின் 'வான் சிறப்பு' எனும் அதிகாரத்திலிருந்து பதினோராவது குறளை நாம் சிந்திக்கவிருக்கிறோம்.

  • "வானின் உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம்
  •  என்றுணரப் பாற்று"

மழை - உலகத்தின் அமிழ்தம்

இந்த உலகம் தடையின்றி இயங்குவதற்கு அடிப்படையாக இருப்பது மழை. மழை பொய்த்தால் வறட்சி ஏற்படும்; உயிர்கள் அழியும் சூழல் உருவாகும். வாழ்வின் ஆதாரமாக விளங்குவதால் தான், மழையை வள்ளுவர் 'அமிழ்தம்' என்று அழைக்கிறார். அரிய வகை உணவுப் பொருட்கள், நீர் மற்றும் தாய்ப்பால் ஆகியவற்றை நாம் அமிழ்தம் என்று சொல்வதுண்டு. அந்த வரிசையில், உலகை வாழவைக்கும் மழையும் ஓர் அமிழ்தமே.

விவிலியம் காட்டும் ஐவகை உணவுகள்

மழை எவ்வாறு ஓர் உணவாகவும் அமிழ்தமாகவும் அமைகிறதோ, அவ்வாறே விவிலியத்தில் ஐந்து வகையான உணவுகள் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது:

  1. அன்றாட உணவு: "எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்" என்று இறைமகன் இயேசு நமக்குப் போதித்த அடிப்படை உணவு.
  2. இறைமொழி உணவு: "மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான்" என இயேசு குறிப்பிட்ட இறைவார்த்தை.
  3. நற்கருணை உணவு: "இது என் உடல்; உங்களுக்காகத் தரப்படும் உணவு" என்று இயேசு வழங்கிய அவரது திருவுடல் என்னும் புனித உணவு.
  4. இறைப்பணி உணவு: "என்னை அனுப்பியவரின் திருவுளத்தின்படி வாழ்வதும், அவர் ஒப்படைத்த வேலையைச் செய்து முடிப்பதுமே எனது உணவு" என்று யோவான் நற்செய்தியில் இயேசு அறிமுகப்படுத்திய உயரிய உணவு.
  5. விண்ணக விருந்து: நிறைவாக விண்ணகத்தில் நமக்காகக் காத்திருக்கும் நித்தியமான திருவிருந்து.

இந்த உணவு வரிசையில் மழையும் (மாரி) முக்கிய இடம் பிடிக்கிறது. அன்னை மரியா தன் மகனையே உலகுக்கு உணவாக (அமிழ்தமாக) வழங்கியது போல, வானிலிருந்து பொழியும் மாரியும் உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் அமிழ்தமாகத் திகழ்கிறது. அமிழ்தமாகிய மழை அனைவருக்கும் கிடைக்க வேண்டுமானால், நாம் செயல்பட வேண்டிய நேரம் இது. "மரம் வளர்த்தால் மழை வரும்" என்பது வெறும் வாசகம் அல்ல; அது நம் வாழ்வின் உறுதிமொழி.மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்து, இயற்கையைப் பேணுவோம்.மழையை அமிழ்தமாக ஏற்று, அது அனைவருக்கும் தடையின்றி கிடைக்க வகை செய்யும் உறுதிப்பாட்டை நாம் ஏற்போம்.

அனைவருக்கும் இனிய வணக்கமும் வாழ்த்துக்களும். நன்றி.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 மே 2026, 12:46