தேடுதல்

16-வது உலக ஆயர்கள் மாமன்றம் (கோப்பு படம்) 16-வது உலக ஆயர்கள் மாமன்றம் (கோப்பு படம்)  (ANSA)

ஆயர் தேர்வு மற்றும் சிக்கலான விவகாரங்களுக்கான 'மாமன்றம்' வழிகாட்டுதல்கள்

மாமன்ற பொதுச்செயலகத்தின் அறிக்கைகள் குழு 7, ஆயர் தேர்வில் உள்ளூர் சமூகம், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் ஆலோசனைகளைப் பெற்று, தூய ஆவியின் வழிகாட்டுதலுடன் ஒரு கூட்டுப்பயணப் பகுத்தாய்வை மேற்கொள்ள வலியுறுத்துகிறது. குழு 9, சிக்கலான விவகாரங்களை 'முளைத்து வரும் சவால்கள்' என அழைத்து, மேய்ப்புப்பணி நெறிமுறை மற்றும் ஆழமான உரையாடல்கள் மூலம் அவற்றுக்கான தீர்வுகளைத் தேடப் பரிந்துரைக்கிறது.

ஜான்சிராணி அருளாந்து  - வத்திக்கான்

ஆயர்களுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தும் ஆய்வு குழு எண். 7-ன் முதல் பகுதி, மற்றும் திருஅவையின் சிக்கலான விவகாரங்களைப் பகுத்தாய்வதற்கான இறையியல் அளவுகோல்கள் மற்றும் ' மாமன்றம் ' (Synod) முறைகளைக் கையாளும் ஆய்வு குழு எண். 9-ன் இறுதி அறிக்கை ஆகிய இரண்டு முக்கிய அறிக்கைகளை மாமன்ற பொதுச்செயலகம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் திருஅவை வாழ்வின் சாராம்சத்தைப் பற்றியவை என்று உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலாளர் கர்தினால் மாரியோ கிரேச்  அவர்கள் வலியுறுத்தினார். ஒரு ஆயரைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒட்டுமொத்த சமூகமும் பங்கேற்கும் ஒரு உண்மையான திருஅவை சார்ந்த பகுத்தாய்வுச் செயல் என்பதை முதல் அறிக்கை முன்னிலைப்படுத்துகிறது. இரண்டாவது அறிக்கை, செவிமடுத்தல், உரையாடல் மற்றும் பல்வேறு அறிவு வடிவங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் சிக்கலான பிரச்சினைகளைக் கையாள்வதற்கான நடைமுறை கருவிகளை வழங்குகிறது.

மேலும் அறிக்கை எண். 7, ஆயர்களின் தேர்வை செபம் மற்றும் செவிமடுத்தலில் வேரூன்றிய, தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் ஒரு செயல்பாடாக முன்வைக்கிறது. இதில் உள்ளூர் திருஅவை, ஆயர் பேரவைகள் மற்றும் திருத்தூதரகத் தூதுவர் ஆகியோர் ஈடுபடுகின்றனர். மறைமாவட்டங்கள் தங்களின் தேவைகளைத் தொடர்ந்து மதிப்பீடு செய்யவும், ஆலோசனை மன்றங்கள், துறவிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் கலந்தாலோசிக்கவும் இந்த ஆவணம் பரிந்துரைக்கிறது.

வேட்பாளர்கள், கூட்டுப்பயண வழித்தடத் தகுதிகளை' (Synodal competencies), அதாவது ஒன்றிப்பு, உரையாடல் மற்றும் கலாச்சாரப் புரிதலை வளர்ப்பது போன்ற பண்புகளை வெளிப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். மேலும், உரோமைச் தலைமை செயலகத்திற்குள் (Roman Curia) அதிக மாமன்ற வழிமுறைகளைப் பின்பற்றவும், தேர்வு செயல்முறையை அவ்வப்போது மதிப்பீடு செய்யவும் இது பரிந்துரைக்கிறது.

கோட்பாடு, மேய்ப்புப்பணி மற்றும் அறநெறி சார்ந்த சிக்கல்களை அணுகும் முறையில் ஒரு புதிய மாற்றத்தை அறிக்கை எண். 9 முன்மொழிகிறது; இத்தகைய விவகாரங்களை 'சர்ச்சைக்குரியவை' என்று அழைப்பதற்குப் பதிலாக 'முளைத்து வரும் சவால்கள்' (Emerging issues) என்று அழைக்க இது பரிந்துரைக்கிறது. 'மேய்ப்புப்பணி சார்ந்த நெறிமுறையை' (Principle of pastorality) அறிமுகப்படுத்தும் இந்த ஆவணம், பிறர் மீதான பொறுப்புணர்வையும், தூய ஆவியாரின் தூண்டுதலுக்குச் செவிசாய்ப்பதையும் முதன்மைப்படுத்துகிறது. எதார்த்த சூழலை வாசித்தல், ஆழ்ந்து கவனித்தல் மற்றும் வல்லுநர்களின் ஆலோசனையைப் பெறுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய ஆய்வு முறையை இது முன்வைக்கிறது. இந்த அணுகுமுறையின் அடிப்படையில், ஓரின ஈர்ப்பு கொண்ட நம்பிக்கையாளர்கள் மற்றும் தீவிரமான அகிம்சைப் போராட்டம் போன்ற தலைப்புகளைப் பற்றி விவாதிக்கும் இந்த அறிக்கை, அவற்றுக்கு இறுதியான முடிவுகளை வழங்குவதற்குப் பதிலாக, இறைத்திருவுளத்தை தெளிந்து தேர்வதற்கான பாதைகளைத் திறந்து விடுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 மே 2026, 14:31