தேடுதல்

குருத்துவத் திருநிலைப்பாட்டு நிகழ்வில் அருள்பணியாளர்கள் குருத்துவத் திருநிலைப்பாட்டு நிகழ்வில் அருள்பணியாளர்கள்  

நோம் பென்னில் புதிய புனித யோசேப்பு ஆலயம் அர்ப்பணிப்பு!

கம்போடியாவின் நோம் பென்னில், தொழிலாளரான புனித யோசேப்பிற்கான புதிய கத்தோலிக்க ஆலயம் மே 2-ம் தேதி புனிதப்படுத்தப்பட்டது. ஆயர் ஆலிவர் ஷ்மிட்ஹூஸ்லர் தலைமை தாங்கிய இவ்விழாவில், மறைசாட்சிகளின் மண் பீடத்தின் அடியில் வைக்கப்பட்டு, அவர்களின் தியாகம் நினைவுகூரப்பட்டது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

மே 02, சனிக்கிழமையன்று, கம்போடியாவின் தலைநகரான நோம் பென்னில், தொழிலாளரான புனித யோசேப்பிற்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய கத்தோலிக்க ஆலயத்தின் அர்ப்பணிப்பு விழா, விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் அப்பகுதி கத்தோலிக்க மக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இந்த அர்ப்பணிப்பு கொண்டாட்டத்திற்கான திருப்பலியை நோம் பென் பகுதியின் திருத்தந்தை பதிலாளாக பணியாற்றும் ஆயர் ஆலிவர் ஷ்மிட்ஹூஸ்லர் அவர்கள் தலைமையேற்று நடத்தினார், இதில் பல அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கொண்டாட்டம் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள ஆயர் அவர்கள், "இந்த ஆலயம் கம்போடியாவில் உள்ள இறைமக்களின் வழிபாடு மற்றும் நன்றியறிதலுக்கான ஒரு புனித இடமாக விளங்கும்" என்றும் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளில் இந்த ஆலயத்தின் கட்டுமானத் திட்டத்தை நிறைவு செய்ததற்காக பால் சட்சிரே மற்றும் அவருடன் இணைந்து பயணியாற்றிய கட்டுமானக் குழுவினருக்கு ஆயர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய ஆலயத்தின் புனித பீடத்திற்கு அடியில் கம்போடிய மறைசாட்சிகளின் மண் வைத்துப் புதைக்கப்பட்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும். இத்துடன், மறைசாட்சி ஆயர் ஜோசப் ச்மார் சாலாஸ் மற்றும் அவருடன் பணியாற்றிய தோழர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்தக் கோரும் முறையான விண்ணப்பம் உரோமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

1970-ம் ஆண்டு ஏறத்தாழ 600 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டது உள்பட நோம் பென் தலத்திருஅவையின் கடினமான கடந்த காலத்தை நினைவு கூர்ந்த ஆயர் அவர்கள், கிறிஸ்தவ நம்பிக்கை இன்னும் நிலைத்திருப்பதை இந்த ஆலயம் நினைவூட்டுவதாக கூறியுள்ளார்.

மேலும், புனிதர்கள் லூயிஸ் மற்றும் செலி மார்ட்டின் ஆகியோரின் புனிதப் பண்டங்களை புதிய பீடத்தில் வைத்த ஆயர், போரினால் துன்புறும் குடும்பங்களுக்காகவும், அமைதிக்காகவும் ஜெபிக்குமாறு நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மற்றுமொரு சிறப்பு நிகழ்வாக கம்போடிய திருஅவை அருள்பணி பால் பாவோ லே குவோக் அவர்களின் குருத்துவத் திருநிலைப்பாட்டையும், அருள்பணி ரேமண்ட் லாரன்ஸ் அவர்களின் திருத்தொண்டர் திருநிலைப்பாட்டையும் கொண்டாடியது. இத்தகைய நிகழ்வுகளின் மூலம் தொன்போஸ்கோவின் சலேசியர்கள் கம்போடியாவில் கல்வி மற்றும் விளிம்பு நிலை இளைஞர்களுக்கான பராமரிப்பில் கவனம் செலுத்தித் தங்களது பணியைத் தொடர்கின்றனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 மே 2026, 15:01