துபாயில் கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து நடத்திய அமைதி வழிபாடு
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
அமைதி என்பது மனிதர்கள் தங்களுடைய சொந்த உழைப்பால் மட்டுமே எட்டிப்பிடிக்கும் ஒரு இலக்கல்ல; அது இறைவனிடமிருந்து நமக்கு அருளப்படும் ஒரு உன்னதமான வரமாகும் என்றும், அதனை மனித உறவுகளின் மூலம் வரவேற்று வளர்த்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும்
தெற்கு அரேபியாவின் திருத்தூதுப் பிரதிநிதி ஆயர் பாவ்லோ மார்டினெல்லி அவர்கள் கூறினார்.
ஏப்ரல் 29, புதனன்று, துபாயிலுள்ள புனித மரியன்னை கத்தோலிக்க ஆலயத்தில் அமைதியை வலியுறுத்தி இடம்பெற்ற தேசிய அளவிலான கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டலின்போது தெற்கு அரேபியாவின் திருத்தூதுப் பிரதிநிதி ஆயர் பாவ்லோ மார்டினெல்லி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
தெற்கு அரேபியாவின் திருத்தூது நிர்வாகமும் புனித மரியன்னை ஆலயமும் முன்னெடுத்த இந்த முயற்சியை வளைகுடா திருஅவைகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைத்திருந்தது.
திருஅவைப் பணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த ஆயர் மார்டினெல்லி அவர்கள், ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதி நிலவ அனைவரும் ஒன்றிணைந்து செபிக்க அழைப்பு விடுத்தார்.
துபாயில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைக் குறிக்கும் வகையிலும், உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையிலும் அமைந்த இந்த இறைவேண்டல் நிகழ்வு மூன்று பகுதிகளாக நடைபெற்றது.
முதலில் நீசேயா நம்பிக்கை அறிக்கையை அறிவித்து, பின் புனித நூல்களை வாசித்து மெழுகுதிரி ஏந்தி அமைதிக்காக மன்றாடி, இறுதியாக அமைதிக்கான மன்றாட்டு மாலை செபித்து ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொண்டனர்.
ஆர்மீனியன், எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ், ஆங்கிலிக்கன், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மற்றும் காப்டிக் திருஅவை ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு வழிபாட்டு முறைகளைச் சேர்ந்த தலைவர்கள் இதில் பங்கேற்ற இந்த நிகழ்வு அமைதிக்கான இறைவேண்டலில் கிறிஸ்தவர்களிடையே நிலவும் ஒற்றுமையை எடுத்துக் காட்டியது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்