தேடுதல்

அன்னை மரியாள் அன்னை மரியாள்  

அன்னை ஓர் அதிசயம்

இறைவனின் மீட்புத் திட்டத்தில் அன்னை மரியா ஒரு தற்செயலான தேர்வு அல்ல. காலம் கனிந்தபோது, கடவுள் தம் மகனை ஒரு பெண்ணிடம் பிறக்கச் செய்தார்.

அருள்பணி. ஜேம்ஸ்

அன்பிற்கினியவர்களே, அன்னை மரியாவைப் பற்றிய வாராந்திரத் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். முதல் அத்தியாயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு, இளமைக்காலம் மற்றும் அவர் ஆலயத்தில் வளர்ந்த விதம் குறித்துக் கண்டோம். இந்த வாரம், மானிட மீட்புத் திட்டத்தில் அன்னை மரியா எவ்வாறு இறைவனால் முன்குறிக்கப்பட்டார், மீட்பரின் தாயாக அவர் அழைக்கப்பட்ட விதம் மற்றும் அவரது கீழ்ப்படிதல் உலகிற்கு எவ்வாறு இரட்சிப்பைக் கொண்டுவந்தது என்பதைப் பற்றி ஆழமாகத் தியானிக்கப் போகிறோம்.பழைய மற்றும் புதிய ஏற்பாடு நூல்கள், இறைவனின் மாபெரும் மீட்புத் திட்டத்தில் மீட்பரின் தாய் ஆற்றிய உன்னதமான பணியைத் தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. உலகில் கிறிஸ்துவின் வருகை எவ்வாறு படிப்படியாகத் தயார் செய்யப்பட்டது என்பதையும், அதில் ஒரு பெண்ணின் பங்கு எவ்வாறு இன்றியமையாததாக இருந்தது என்பதையும் பழைய ஏற்பாடு விவரிக்கிறது.மானிடம் வீழ்ந்த அந்தத் தொடக்க காலத்திலேயே, ஏதேன் தோட்டத்தில் முதல் பெற்றோரான ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மீட்பு குறித்த வாக்குறுதி அளிக்கப்பட்டது. அலகையின் (சாத்தான்) மீது பெறப்போகும் வெற்றியைப் பற்றிய அந்தத் தீர்க்கதரிசனத்தில், அன்னை மரியா இறைவாக்காக முன்குறிக்கப்பட்டு விட்டார்.

"உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்" (தொ.நூல் 3:15) என்று இறைவன் கூறிய போதே, அன்னை மரியா தந்தையாம் இறைவனின் மீட்புத் திட்டத்தில் ஒரு கருவியாகச் செயல்படத் தொடங்கிவிட்டார். எந்தப் பெண்ணுக்கும் இல்லாத தனிச்சிறப்பு மரியாவுக்கு உண்டு என்றால், அது அவர் இறைவனையே கருத்தாங்கியதுதான். இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் அளித்த வாக்குறுதி, கன்னி மரியாவிடம் நிறைவேறியது. "இதோ ஒரு கன்னி கருவுற்று ஒரு மகனைப் பெறுவார்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்" என்ற அந்தத் தூய வசனம், மரியாளின் வழியாகவே மானிடத்திற்கு ஒளியாகத் தோன்றியது.இறைவனின் மீட்புத் திட்டத்தில் அன்னை மரியா ஒரு தற்செயலான தேர்வு அல்ல. காலம் கனிந்தபோது, கடவுள் தம் மகனை ஒரு பெண்ணிடம் பிறக்கச் செய்தார். அந்தப் பெண் இறைவனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவராகவும், பாவத்தின் நிழல் படாதவராகவும் இருக்க வேண்டும் என்பது இறைச் சித்தம்.

கபிரியேல் தூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்று வாழ்த்தியபோது, அந்த வாழ்த்திலேயே மரியாவின் மேன்மை வெளிப்பட்டது. வானதூதரின் அந்தச் செய்தி, மரியாளை அஞ்சச் செய்தாலும், அவர் இறைவனின் வார்த்தைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொண்டார். "இதோ நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு ஆகட்டும்" என்று மரியா கூறிய அந்த ஒரு சொல், மனித குல வரலாற்றையே மாற்றியமைத்தது. மரியாவின் இந்த "ஆம்" (Fiat) என்ற கீழ்ப்படிதல், ஏவாளின் கீழ்ப்படியாமையால் வந்த சாபத்தை நீக்கி, உலகிற்கு ஆசீர்வதிக்கப்பட்ட மீட்பரைத் தந்தது. அன்னை மரியா இயேசுவைக் கருவில் தாங்கியது முதல், அவர் ஒரு சாதாரணத் தாயாக மட்டும் இருக்கவில்லை; அவர் மீட்பின் கருவியாகவும், முதல் சீடராகவும் மாறினார். இறைவனின் வார்த்தையைத் தன் இதயத்தில் இருத்தி, அதைச் சிந்தனை செய்து வாழ்ந்த ஒரு உன்னத ஆளுமை அவர். மரியாளின் கீழ்ப்படிதல் என்பது வெறும் சொல்லோடு நின்றுவிடவில்லை. அவர் கருவுற்றிருந்தபோது, தனது உறவினரான எலிசபெத் கருவுற்றிருப்பதை அறிந்து, அவருக்கு உதவி செய்ய மலைநாட்டிற்கு விரைந்து சென்றார். இது அவரது பிறர்நலச் சேவையையும் அன்பையும் காட்டுகிறது. அன்னை மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது, மரியாவின் வாழ்த்தொலியைக் கேட்டதுமே எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது. பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட எலிசபெத், "பெண்களுக்குள் நீர் ஆசீர்வதிக்கப்பட்டவர்" என்று மரியாளைப் போற்றினார்.

மரியாளின் புகழ்பெற்ற 'Magnificat' (ஆண்டவரைப் பெருமைப்படுத்துகிறேன்) என்ற பாடல், அவரது ஆன்மீக முதிர்ச்சியைக் காட்டுகிறது. தாழ்நிலையில் இருந்த தன்னை இறைவன் உயர்த்தியதையும், ஏழை எளியோர் மீது அவர் காட்டும் இரக்கத்தையும் அந்தப் பாடல் பறைசாற்றுகிறது. இயேசுவின் பிறப்பிற்காகப் பெத்லகேம் சென்றபோது, தங்குவதற்கு இடம் கிடைக்காத நிலையிலும் அன்னை மரியா பொறுமையைக் கடைப்பிடித்தார். மாட்டுத் தொழுவத்தில் மீட்பரை ஈன்றெடுத்த அந்தத் தருணம், எளிமையின் சிகரமாக அன்னை மரியா விளங்குவதை நமக்கு உணர்த்துகிறது. இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தபோது, சிமியோன் என்ற பெரியவர், "உமது இதயத்தையும் ஒரு வாள் ஊடுருவும்" என்று கூறிய தீர்க்கதரிசனத்தை அன்னை மரியா அமைதியாக ஏற்றார். துன்பங்கள் வரும் என்று தெரிந்தும் அவர் பின்வாங்கவில்லை.

இயேசுவின் பணிவாழ்வில் அன்னை மரியா எப்போதும் நிழலாகத் தொடர்ந்தார். கானா ஊர் திருமணத்தில், திராட்சை இரசம் தீர்ந்துபோன போது, அவர் இயேசுவிடம் வைத்த பரிந்துரை, அவரது முதல் அற்புதத்திற்கு வழிவகுத்தது. "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்ற மரியாவின் வார்த்தை இன்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது. இயேசு ஆற்றிய முதல் அருங்குறி அன்னை மரியாவின் பரிந்துரையால்தான் நிகழ்ந்தது என்பது, அவர் மீது இயேசு கொண்டிருந்த மதிப்பையும் அன்பையும் காட்டுகிறது. அந்தச் சிறிய பரிந்துரை, இன்று கத்தோலிக்கத் திருச்சபையில் மரியாவின் பரிந்துரை மன்றாட்டுக்கு மிக முக்கிய ஆதாரமாக உள்ளது.

இயேசு தனது போதனைகளில் பயன்படுத்திய உவமைகள் பலவற்றை அன்னை மரியாளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மீன்பிடித்தல், வானத்துப் பறவைகள், காட்டு மலர்கள் என அன்னை மரியா கற்றுக்கொடுத்த எளிமையான பாடங்களே இயேசுவின் போதனைகளில் வெளிப்பட்டன. இயேசுவின் கல்வாரிப் பயணத்தில், அவரது சீடர்களே கைவிட்டு ஓடியபோது, அன்னை மரியா மட்டும் சிலுவையின் அடியில் உறுதியாக நின்றார். மகனின் வேதனையைத் தன் வேதனையாக ஏற்று, மீட்பின் பலியில் அவரோடு இணைந்திருந்தார்.சிலுவையிலிருந்து இயேசு, "பெண்ணே இதோ உன் மகன்" என்று யோவானைச் சுட்டிக்காட்டியபோது, அன்னை மரியா ஒட்டுமொத்தத் திருச்சபைக்கும் தாயாக மாறினார். அன்று முதல் அவர் அனைத்து விசுவாசிகளுக்கும் புகலிடமாகவும் அன்னையாகவும் இருக்கிறார்.

கர்தினால் நியூமன் கூறியது போல, கிறிஸ்துவின் தாயாக இருக்கும்படி கடவுளால் தெரிவுசெய்யப்பட்ட அன்னை மரியாவின் புனிதத்தையும் ஆளுமையையும் எவராலும் முழுமையாக மதிப்பிட முடியாது. இயேசுவோடு மரபணு ரீதியாகத் தொடர்பு கொண்ட ஒரே ஜீவன் அவரே. அன்னை மரியா ஒரு சிறந்த ஆசிரியராக, வழிகாட்டியாக மற்றும் இறைவனின் கருவியாகத் திகழ்ந்தார். ஞானத்திலும் பண்பிலும் நாளுக்கு நாள் வளர்ந்த அவர், இறைவனின் திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு, இறுதிவரை விசுவாசத்தில் நிலைத்திருந்தார்.

அன்பார்ந்தவர்களே, அன்னை மரியா எவ்வாறு இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து, மீட்பரின் தாயாகத் தன்னை அர்ப்பணித்தார் என்பதை இன்று நாம் சிந்தித்தோம். அவரது கீழ்ப்படிதலும், பரிந்துரைக்கும் பண்பும் நமது வாழ்விற்குப் பெரிய படிப்பினைகளாக உள்ளன. தனது மகனின் துயரத்தில் பங்கெற்று, நமக்காக ஒரு தாயாகச் சிலுவையின் அடியில் நின்ற அந்த அன்னையின் பாதம் பணிந்து ஆசி பெறுவோம். அடுத்த வார அத்தியாயத்தில், அன்னை மரியாவின் வாழ்வின் மேலும் பல புனிதமான தருணங்களைக் காண்போம். அன்னையின் அருள் உங்களோடு இருப்பதாக! 

 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 மே 2026, 14:39