அமைதியின் அடையாளம்: உலக இளையோர் தினத்திற்கான 'முள்வேலிச் சிலுவை'
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
செயோலில் வரும் 2027-ம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக இளைஞர் நாளுக்காக ஒரு வலிமையான சின்னம் உருவாக்கப்பட்டு வருகின்றது.
இதற்காக வட மற்றும் தென் கொரியாவிற்கு இடையிலான இராணுவ நடவடிக்கைகள் அற்ற பகுதியிலிருந்து (DMZ) அகற்றப்பட்ட முள்வேலிகளைக் கொண்டு ஐந்து மீட்டர் உயரமுள்ள "முள்வேலி சிலுவை" ஒன்று செய்யப்படுகிறது.
பிரிவினையின் அடையாளத்தை அமைதி, நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செயோல் உயர்மறைமாவட்டம், Together Walking என்ற அறக்கட்டளையுடன் இணைந்து முன்னெடுத்துள்ள இந்தத் திட்டம், ஏப்ரல் 12 , தென் கொரியாவின் தலைநகரான செயோலில் (Seoul) அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மியோங்டாங் பேராலயத்தில் பேராயர் பீட்டர் சூன்-டைக் சுங் தலைமையில் இடம் பெற்ற அர்ச்சிப்பு நிகழ்வுடன் தொடங்கியுள்ளது.
தன்னார்வலர்களைக் கொண்ட ஒரு குழு, வரும் 2027 ஏப்ரல் மாதம் வரை இந்த முள்வேலிகளைக் கைகளால் சிலுவைகளாக உருமாற்றும் பணியில் ஈடுபடவுள்ளது. இந்தப் புனிதமான முயற்சியில் இளைஞர்கள் பெரும் திரளாகப் பங்கேற்கவுள்ளனர்.
ஒவ்வொரு ஞாயிறும் முன்னெடுக்கப்படும் இத்திருப்பணியில், உடல் உழைப்போடு இறைவேண்டலும் ஒன்றிணைகிறது. இது தனிமனித மனக்காயங்கள் மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்து ஆழமாகச் சிந்திப்பதற்கும், அவற்றைக் குணப்படுத்துவதற்குமான ஒரு தளமாக அமையும்.
"இந்தத் திட்டம் திருஅவையைக் கடந்து சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களையும் உள்ளடக்கி செயல்படுத்தப்படுவதன் மூலம் ஒற்றுமையை ஊக்குவிக்கிறது. இந்த சிலுவை உலக இளைஞர் தினத்தின் போது திருத்தந்தையால் அறிமுகப்படுத்தப்பட்டு அர்ச்சிக்கப்படும்.
பீதேஸ் செய்தி நிறுவனம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்