தேடுதல்

புனித மாற்கு புனித மாற்கு  

இன்றைய புனிதர்

புனித பேதுரு, புனித பவுல் ஆகியோருடன் வாழ்ந்து ஆண்டவரின் பணியில் பங்குகொண்ட மாற்கு நற்செய்தி அறிவித்ததற்காக அலெக்ஸாண்டிரியா நகரில் கி.பி. 68 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாள் கொலை செய்யப்பட்டு மறைசாட்சியாக உயிரிழந்தார்.

திரு. பிலோமி அலெக்ஸ்

நான்கு நற்செய்தியாளர்களுள் ஒருவரும் புனித பர்னபாவின் உறவினருமான மாற்கு எருசலேமில் மரியா என்பவருக்கு மகனாக பிறந்தார். புனித பவுலோடு இணைந்து நற்செய்திப்பணிக்காக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற மாற்கு விருத்தசேதனம் குறித்து பவுலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் எருசலேம் திரும்பினார். கி.பி. 62 ஆம் ஆண்டு புனித பவுல் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டபோது பவுலின் மீது அளவுகடந்த அன்பு கொண்ட மாற்கு சிறையில் உடனிருந்து உதவிகள் செய்தார். புனித பேதுருவின் நெருங்கிய சீடரான மாற்கு, பேதுருவினை தன் தந்தையாக ஏற்றுக்கொண்டு பணிவிடைகள் செய்து அவரின் அருளுரைகளை தொகுத்து எழுதினார். ஆண்டவர் இயேசுவின் வரலாற்றினையும் அவரது போதனைகளையும் முதன் முதலில் எழுதிய மாற்கு அலெக்சாந்திரியா நகரின் முதல் ஆயராக பொறுப்பேற்று ஆண்டவரின் பணிகளை செய்தார்.

புனித பேதுரு, புனித பவுல் ஆகியோருடன் வாழ்ந்து ஆண்டவரின் பணியில் பங்குகொண்ட மாற்கு நற்செய்தி அறிவித்ததற்காக அலெக்ஸாண்டிரியா நகரில் கி.பி. 68 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாள் கொலை செய்யப்பட்டு மறைசாட்சியாக உயிரிழந்தார். திருத்தூதர்களோடு வாழ்ந்து ஆண்டவரின் போதனைகளை எழுதி இறைபக்தியோடு வாழ்ந்த மாற்குவினை திரு அவை புனிதராக உயர்த்தியது. புனித மாற்குவின் புனித பொருட்கள் இன்னும் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்த ஒன்று. இன்று புனித மாற்குவின் திருவிழாவினை கொண்டாடுகின்ற நாம் தினமும் திருவிவிலியத்தினை பக்தியோடு வாசித்து இறைவார்த்தையின்படி நடப்பதற்கு முயற்சியெடுப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஏப்ரல் 2026, 13:50