தேடுதல்

புனித சிக்மரிங்கன் பிதேலிஸ் புனித சிக்மரிங்கன் பிதேலிஸ்  

இன்றைய புனிதர்

பல எதிர்ப்புகளுக்கிடையே ஆண்டவரின் நற்செய்தியினை மக்களுக்கு அறிவித்து துணிவோடு இறைப்பணிகளை செய்த அருட்தந்தை பிதேலிஸ் கி.பி 1622 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள் தான் காட்சிக்கண்ட அதே நாளில் கொலை செய்யப்பட்டு மறைசாட்சியாக உயிரிழந்தார்.

ஜெர்மனி நாட்டிலுள்ள சிக்மரிங்கனில் வாழ்ந்த இறைபக்தி நிறைந்த குடும்பத்தில் கி.பி.1577 ஆம் ஆண்டு பிறந்தார் பிதேலிஸ். சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற பிதேலிஸ் ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள கில்மார் பகுதியில் வழக்கறிஞராக பணியாற்றி ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்தார்.

ஏழைகளின் வழக்கறிஞர் என்ற பெயர் பெற்ற பிதேலிஸ் ஆண்டவர் மீது கொண்ட அன்பினால் கப்புச்சின் சபையினில் சேர்ந்து குருத்துவப்பயிற்சி பெற்றார். கி.பி.1612 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் நாள் தன் முதல் திருப்பலியினை நிறைவேற்றிய அருட்தந்தை பிதேலிஸ் மறையுரையாற்றவும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கவும் முழுநேரப்பணியாளராக நியமணம் செய்யப்பட்டார்.

மறையுரையினில் சிறந்து விளங்கிய அருட்தந்தை பிதேலிஸ் தன் ஆழமான மறையுரையினால் பிரிந்து போன சகோதரர்களை தாய் திருச்சபைக்கு திரும்ப சேர்த்தார். கி.பி 1622 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் திருப்பலி நிறைவேற்றிய பிறகு தான் இறக்க இருப்பதினை காட்சியாக கண்ட பிதேலிஸ் தனது இறப்பினை முன்னறிவித்தார். பல எதிர்ப்புகளுக்கிடையே ஆண்டவரின் நற்செய்தியினை மக்களுக்கு அறிவித்து துணிவோடு இறைப்பணிகளை செய்த அருட்தந்தை பிதேலிஸ் கி.பி 1622 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள் தான் காட்சிக்கண்ட அதே நாளில் கொலை செய்யப்பட்டு மறைசாட்சியாக உயிரிழந்தார்.

கப்புச்சின் சபையின் முதல் மறைசாட்சியான அருட்தந்தை பிதேலிஸினை திருத்தந்தை 14 ஆம் ஆசிர்வாதப்பர் கி.பி 1746 ஆம் ஆண்டு புனிதராக உயர்த்தி வழக்கறிஞர்களின் பாதுகாவலராக அறிவித்தார். இன்று புனித பிதேலிஸ் திருவிழாவினை கொண்டாடுகின்ற நாம் வழக்கறிஞர்கள் நீதியோடும் நேர்மையோடும் வழக்குகளை வாதாடுவதற்கு வரம் தரும் படியாக ஆண்டவரிடம் செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 ஏப்ரல் 2026, 12:45