தேடுதல்

திருத்தந்தையுடன் கர்தினால் தொமினிக் ஜோசப் மாத்யூ திருத்தந்தையுடன் கர்தினால் தொமினிக் ஜோசப் மாத்யூ   (ANSA)

வளைகுடா நாடுகளில் அமைதி நிலவ தெஹ்ரான் பேராயர் அழைப்பு!

உரோமையிலுள்ள எருசலேம் திருச்சிலுவைப் பேராலயத்தில், 'அமைதியின் பணி – ஆன்மாவில் ஒரு பயணம்' என்ற மாதாந்திர முன்னெடுப்பின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த மெழுகுவர்த்தி இறைவேண்டல் நிகழ்வானது, புனித பூமி, கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் சூடான் உட்பட உலகளாவிய மோதல்களின் மீது கவனத்தை ஈர்த்தது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உரோமையில் நடைபெற்ற புனித வார இறைவேண்டல் கூட்டம் ஒன்றில், தெஹ்ரான் பேராயர் கர்தினால் தொமினிக் ஜோசப் மாத்யூ அவர்கள், வளைகுடாவில் இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், பதிலடிக் கொடுக்கும் முறையைக் கைவிடவும் அவசர வேண்டுகோள் விடுத்தார்.

உரோமையிலுள்ள எருசலேம் திருச்சிலுவைப் பேராலயத்தில் உரையாற்றிய கர்தினால் மாத்யூ அவர்கள், வன்முறைச் சுழல்களுக்குப் பதிலாக உரையாடல், பொறுமை மற்றும் தாராளமான, மாண்புக்குரிய  செயல்களை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்களாலும், எருசலேமில் புனித வார வழிபாட்டு நிகழ்வுகள் மீது விதிக்கப்பட்ட அண்மைய கட்டுப்பாடுகளாலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குறித்தும் மிகுந்த கவலை தெரிவித்தார் கர்தினால் மாத்யூ.

இந்நிகழ்வில் பங்குபெற்ற உரோமை மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளர் கர்தினால் பல்தசாரே ரெய்னா அவர்கள், "அமைதி என்பது ஓர் அரசியல் உத்தி அல்ல, மாறாக அது கிறிஸ்துவின் முன்மாதிரியில் வேரூன்றியுள்ளது" என்று வலியுறுத்திக் கூறினார்.

மேலும், "வன்முறை தொடர்ந்து வன்முறையையே உருவாக்கும்" என்று எச்சரித்ததோடு, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்பாவி மக்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் சுட்டிக்காட்டினார் கர்தினால் ரெய்னா

'அமைதியின் பணி – ஆன்மாவில் ஒரு பயணம்' என்ற மாதாந்திர முன்னெடுப்பின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த மெழுகுவர்த்தி இறைவேண்டல் நிகழ்வானது, புனித பூமி, கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் சூடான் உட்பட உலகளாவிய மோதல்களின் மீது கவனத்தை ஈர்த்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஏப்ரல் 2026, 14:11