இறை அழைத்தலுக்கான உலக செப நாளை கொண்டாடிய சீன கத்தோலிக்க சமூகங்கள்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
இறை அழைத்தலுக்கான உலக செப நாளையொட்டி, 'என்னைப் பின்பற்றி வாருங்கள்' என்ற கிறிஸ்துவின் அழைப்பிற்கு மற்றவர்கள் செவிசாய்க்க உதவுமாறு ஷிஜியாசுவாங் பெய்ஜிங் மறைமாவட்டக் குருத்துவக் கல்லூரி அழைப்பு விடுத்துள்ளது. இறை அழைத்தலை வளர்த்தெடுப்பதில் அனைத்துக் கிறிஸ்தவர்களும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
சீனா முழுவதும் குருத்துவ மற்றும் துறவற அழைப்புகளை ஊக்குவிக்க, கடந்த ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, பெய்ஜிங்கில் உள்ள பங்குத்தள ங்களில் 'இறைவார்த்தை ஆண்டை' முன்னிட்டு, விவிலியம் சார்ந்த பயிற்சி கையேடுகள் மற்றும் பொருட்கள் நம்பிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
நிங்போ (Ningbo) மறைமாவட்டத்தில் நான்கு புதிய அருள்பணியாளர்களைத் திருநிலைப்படுத்திய அம்மறைமாவட்டத்தின் ஆயர் பிரான்சிஸ் சேவியர் ஜின் யாங்கே அவர்கள், இறை அழைத்தலை உறுதிப்படுத்த செபமும், தெளிவான பகுத்தறிதலும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
மேலும், இறைவனுக்குத் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கத் துணியும் இளைஞர்கள் தாராள மனப்பான்மையுடன் முன்வர வேண்டும் என்றும் நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஜியுஜியாங் மற்றும் ஷான்சி பகுதிகளில் உள்ள குருத்துவக் கல்லூரி மாணவர்கள், செபம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் இறை அழைத்தல் குறித்த புரிதலை விசுவாசிகளிடையே ஏற்படுத்தினர்.
குருத்துவக் கல்லூரி மாணவர்களும் பயிற்சியாளர்களும் பல்வேறு பங்குத்தளங்ளைச் சந்தித்து, இறை அழைத்தல்களை வளர்ப்பதில் குடும்பங்களின் பங்கை வலியுறுத்தியதோடு, திருஅவை பணிகளுக்கு ஆதரவு நல்குமாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்