தேடுதல்

தம்புரா-யாம்பியோ மறைமாவட்ட ஆயர் எட்வர்டு ஹிப்போரோ குசாலா தம்புரா-யாம்பியோ மறைமாவட்ட ஆயர் எட்வர்டு ஹிப்போரோ குசாலா 

திருத்தந்தையின் வருகை: ஆப்பிரிக்காவில் அமைதி மற்றும் ஆன்மீக மாற்றத்திற்கான ஒரு புதிய தொடக்கம்

ஆப்பிரிக்காவிற்கு திருத்தந்தை மேற்கொண்ட வருகை, அங்கிருக்கும் மக்களிடையே ஏற்படுத்திய வலுவான ஆன்மீக மாற்றத்திற்காக தம்புரா-யாம்பியோ மறைமாவட்ட ஆயர் எட்வர்டு ஹிப்போரோ குசாலா தனது நன்றியைப் பதிவு செய்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

தெற்கு சூடானில் உள்ள தம்புரா-யாம்பியோ மறைமாவட்டத்தின் ஆயர் எட்வர்டு ஹிப்போரோ குசாலா அவர்கள், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் அண்மைய ஆப்பிரிக்க வருகைக்காகவும் அது ஏற்படுத்திய ஆழமான ஆன்மீக மற்றும் மேய்ப்புப்பணி தாக்கத்திற்காகவும்  தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-ல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெற்கு சூடான் வந்தபோது, அரசியல் தலைவர்களின் பாதங்களை முத்தமிட்டு அமைதி வேண்டினார். அந்த வரலாற்றுச் செயல், வெறும் அரசியல் பேச்சுகளைத் தாண்டி, வெளியுறவுக் கொள்கையையே ஒரு 'அமைதிக்கான இறை அழைப்பாக' மாற்றியது என்று ஆயர் எட்வர்டு ஹிப்போரோ அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அல்ஜீரியாவில் தொடங்கிய திருத்தந்தை லியோ அவர்களின் ஆப்பிரிக்கப் பயணம் அமைதியையே மையமாகக் கொண்டிருந்தது என்றும், நம்பிக்கை மிகுந்திருந்தாலும் போர்களால் வடுக்களைச் சுமக்கும் ஆப்பிரிக்காவிற்கு, இவரது செய்தி பெரும் ஆறுதலையும் ஒரு மாற்றத்திற்கான சவாலையும் தந்துள்ளதாக ஆயர் ஹிப்போரோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

மலைப்பொழிவின் போதனைகள் தலைமைப் பண்பிற்குப் புதிய விளக்கத்தைத் தருகின்றன என்று எடுத்துக்காட்டிய ஆயர் ஹிப்போரோ அவர்கள், உண்மையான தலைமை என்பது பணிவு, நீதி மற்றும் இரக்கத்தில்  உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் வன்முறை இல்லாதிருப்பது மட்டும் அமைதி அல்ல மாறாக, உண்மை நிலைநாட்டப்படும் போதும், மனித மாண்பு மதிக்கப்படும் போதும் மட்டுமே உண்மையான அமைதி பிறக்கிறது  என்று ஆயர் ஹிப்போரோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோரின் குரல்களை எதிரொலிக்கும் வகையில், வெறும் பேச்சோடு நில்லாமல் செயலில் இறங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஆயர் ஹிப்போரோ அவர்கள், குறிப்பாக, பொறுப்புள்ள தலைவர்களை உருவாக்குதல், இளைஞர்களை வழிநடத்துதல் மற்றும் உரையாடலை வளர்த்தெடுத்தல் ஆகியவையே இன்றைய காலத்தின் கட்டாயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்தந்தையின் வருகையினால் ஏற்பட்ட உண்மையான தாக்கம், மக்களின் மாற்றமடைந்த வாழ்க்கை முறையிலும், அமைதிக்காக அவர்கள் மேற்கொள்ளும் புதிய உறுதிப்பாட்டிலுமே அடங்கியுள்ளது என்று ஆயர் ஹிப்போரோ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஏப்ரல் 2026, 13:37