கர்தினால் பியெத்ரோ பரோலின் கர்தினால் பியெத்ரோ பரோலின்  (ANSA)

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களையத் திருஅவை அழைப்பு

2026-ஆம் ஆண்டின் நிதி மேம்பாட்டிற்கான ECOSOC மன்றத்தில், 'செவில்லா உறுதிப்பாட்டை' (Sevilla Commitment) வரவேற்றுத் திருஅவை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

2026-ஆம் ஆண்டின் நிதி மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதார மற்றும் சமூக மன்றக் (ECOSOC) கூட்டத்தில், உலகளாவிய நிதி அமைப்புகளில் சீர்திருத்தம் கோரும் 'செவில்லா உறுதிப்பாட்டை' (Sevilla Commitment) வரவேற்று, ஐக்கிய நாடுகள் அவைக்கான திருஅவையின் நிரந்தர பார்வையாளர் குழு தனது ஆதரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேம்பாடு என்பது மக்களை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், நிதி கட்டமைப்புகள் மனித மாண்பு மற்றும் அனைத்து மக்களின், குறிப்பாக ஏழைகளின் நல்வாழ்வுக்குச் சேவை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

அனைத்துலக நாடுகள் அளிக்கும் வாக்குறுதிகளுக்கும், கோடிக்கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் எதார்த்த நிலைக்கும் இடையே இடைவெளி அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள அதன் அறிக்கை, குறிப்பாக வளர்ச்சி குறைந்த நாடுகள், நிலப்பரப்பால் சூழப்பட்ட நாடுகள் மற்றும் சிறிய தீவு நாடுகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிகரித்து வரும் கடன் சுமைகளால் நலவாழ்வு மற்றும் கல்வி போன்ற இன்றியமையாத துறைகளில் முதலீடுகள் குறைகின்றன என்பதை எடுத்துக்காட்டிய அவ்வறிக்கை, உதவி செய்வதாக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இராணுவச் செலவுகள் அதிகரித்து வருவதையும் எடுத்துரைத்துள்ளது.

உலகளாவிய நெருக்கடிகளால் மக்கள் அவதிப்படுவதை ஒரு கொள்கை தோல்வியாக மட்டுமன்றி, ஒரு அறநெறி சார்ந்த தோல்வியாகவும் கருதி அணுக வேண்டும் எனத் திருஅவை வலியுறுத்தியுள்ளதை அவ்வறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.

தனியார் நிதி நிறுவனங்கள் பொதுப் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள திருஅவை, கடன் பெற்றுள்ள நாடுகள் அந்த நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் கூற்றுப்படி, மனித மாண்பைப் பாதுகாக்கவும் உலகளாவிய சமத்துவமின்மையை ஒருமனதாகத் தீர்க்கவும் முன்வர வேண்டும் என்று அவ்வறிக்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நிலையான வளர்ச்சி, அனைத்துலக நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் கொள்கை ஆலோசனை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஐ.நா. அமைப்பின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக இந்த பொருளாதார மற்றும் சமூக மன்றம் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஏப்ரல் 2026, 13:36