இலாவோசில் எழுச்சியுடன் நடைபெற்ற அருள்பணித்துவத் திருப்பொழிவு விழா
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
இலாவோசு கத்தோலிக்க திருஅவைக்குக் கிடைத்துள்ள இரண்டு புதிய அருள்பணியாளர்கள், கடவுள் நமக்கு அளித்த மாபெரும் கொடையாகும் என வியஞ்சான்-தாகேக் (Vientiane-Thakhek) மறைமாவட்டத்தின் திருத்தந்தை பதிலாள் ஆயர் அந்தோணி அதௌன் ஹொங்சாபோங் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய ஆயர் ஹொங்சாபோங் அவர்கள் , 'இந்த நியமனம் நம்மிடையே நம்பிக்கையை விதைக்கும் இறைவனின் செயல்' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஏறத்தாழ 53,000 கத்தோலிக்க நம்பிக்கையாளர்களைக் கொண்ட ஒரு சிறிய சமூகமான இலாவோசில் உள்ள கத்தோலிக்க திருஅவை, இரண்டு புதிய அருள்பணியாளர்கள் அருள்பொழிவு பெற்றதன் மூலம் ஒரு நம்பிக்கையூட்டும் கொடையைப் பெற்றுள்ளது.
தாகேக் பகுதியில் அமைந்துள்ள புனித லூயிஸ் ஆலயத்தில், ஏப்ரல் 22 புதன்கிழமை அன்று அருள்பணித்துவத் திருநிலைப்பாட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், ஆயர் ஜீன்-மரிய வியான்னி பிரிடா இந்திராத் அவர்களின் கைகளால், உலக இரட்சகர் சபையைச் சார்ந்த பீட்டர் ஞான்தினா பியாகியோ மற்றும் பிலிப் நோய் காம்ஹோ ஆகிய இரு உறுப்பினர்களும் அருள்பணியாளர்களாகத் திருப்பொழிவு செய்யப்பட்டனர்.
மிகுந்த மகிழ்ச்சியானதாகவும் உற்சாகமானதாகவும் அமைந்த இந்தக் கொண்டாட்டத்தில் இலாவோசு மற்றும் அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்தும் 1,200-க்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த திரு நிகழ்வுக்காக நன்றி தெரிவிக்கும் விதமாகவும் தனது ஆழ்ந்த இறை நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாகவும் அங்குள்ள மக்கள் நடனமாடி, திருப்பாடல்கள் பாடி, செபங்கள் செய்தனர்.
இந்நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆயர் அந்தோணி அதூன் ஹாங்சாபோங் அவர்கள் , இது ஒரு மகிழ்ச்சியின் தருணம் என்றும் இளைஞர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அங்குள்ள கிறிஸ்தவ சமூகத்தின் ஆன்மீக ஈடுபாட்டை பிரதிபலிக்கும் வகையில் ஒரு இரவு முழுவதும் செபம் மற்றும் நற்கருணை ஆராதனையைத் தொடர்ந்து இடம் பெற்ற இந்த கொண்டாட்டமானது, சவால்கள் இருந்தபோதிலும், இலாவோசில் உள்ள திருஅவை எதிர்நோக்கு, நம்பிக்கை மற்றும் அறப்பணிகளில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பதற்கான சான்றாகும்.
இந்தக் கொண்டாட்டத்தைக் குறித்துப் பேசிய ஆயர் என்ரிக் ஃபிகரேடோ அவர்கள், 'புதிய அருள்பணியாளர்களின் இந்தத் திருநிலைப்பாடு, திருஅவையின் பணிகளுக்குக் கூடுதல் வலுசேர்க்கிறது என்றும், இறைப்பராமரிப்பின் மீது முழு நம்பிக்கை வைத்து எதிர்காலப் பணிகளை முன்னெடுக்க இது நமக்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
பீதேஸ் செய்தி நிறுவனம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்