மறைசாட்சிகளின் இரத்தமே ஒற்றுமையின் விதை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
பிற கிறிஸ்தவ சபையினரிடம் உள்ள கிறிஸ்துவின் நற்பண்புகளையும், உயிரைத் தியாகம் செய்யும் அளவு அவர்கள் பகிரும் விசுவாச சாட்சியத்தையும் போற்றுவது முறையானது என்று ஒற்றுமையை மீண்டும் நிலைநாட்டுதல் (Unitatis Redintegratio) என்ற ஆவணம் கூறுகிறது என்று கர்தினால் Koch அவர்கள் கூறினார்.
டைபர் தீவில் அமைந்துள்ள புனித பர்த்தலமேயு பேராலயத்தில் (Basilica of Saint Bartholomew), ஆர்மீனியக் கிறிஸ்தவர்களின் விசுவாச சாட்சியத்தை நினைவுகூரும் வகையில் இடம் பெற்ற ஒரு சிறப்பு செப வழிபாட்டின் போது இவ்வாறு கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Koch அவர்கள் கூறினார்.
மேலும் கிறிஸ்தவர்கள் அனைவரும் தூய ஆவியாரால் ஒருமித்த ஒற்றுமையில் இணைக்கப்பட்டுள்ளனர் என்பதை 'மக்களினங்களின் ஒளி (Lumen Gentium) ஆவணம் அங்கீகரிக்கிறது என்று எடுத்துக்காட்டிய கர்தினால் Koch அவர்கள், கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆர்மீனியக் கிறிஸ்தவர்கள் சிந்திய இரத்த சாட்சியத்தை (Medz Yeghern) நினைவுகூர நாம் இங்கே ஒன்று கூடியுள்ளோம் என்று குறிப்பிட்டார்.
மறைசாட்சி என்பது கிறிஸ்தவத்தின் இதயம் போன்றது என்றும் அதுவே திருஅவையை இறை அன்பின் சாட்சியான கிறிஸ்துவோடு இணைக்கிறது என்பதை இவர்களின் தியாகம் நமக்கு உணர்த்துகிறது என்றும் கர்தினால் Koch அவர்கள் கூறினார்.
இறுதியாக மறைசாட்சிகளின் இரத்தமே கிறிஸ்தவ ஒற்றுமையின் விதை என்ற தெர்துல்லியனின் வாக்கிற்கிணங்க, அந்த உன்னத தியாகம், நம்மைப் பிளவுகளற்ற முழுமையான இறை ஒன்றிப்பை நோக்கி வழிநடத்தட்டும் என்று கூறி உரையை கர்தினால் Koch அவர்கள் நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்