வன்முறையற்ற அரசியல் சூழலை வலியுறுத்தும் கென்ய ஆயர்கள்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
மதிப்புமிக்க மனித வாழ்க்கை, அறநெறி சார்ந்த தலைமைத்துவம் மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் நாட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்ற தனது கருத்தை வலியுறுத்தி கென்ய கத்தோலிக்க ஆயர் பேரவை ஒரு விரிவான செய்தியறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 16, வியாழனன்று கரேன் நகரில் கூடிய கென்ய கத்தோலிக்க ஆயர் பேரவை, உயிர்த்த ஆண்டவர் அளிக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த செய்தியை மக்களுக்கு வழங்கியுள்ளது.
உயிர்ப்புப் பெருவிழா மற்றும் அமைதிக்கான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் அழைப்பு ஆகியவற்றால் ஊக்கம் பெற்ற கென்ய ஆயர்கள், கென்யா போன்ற நாடுகளை பாதிக்கும் உலகளாவிய மோதல்களுக்கு அமைதி பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், மனித வாழ்வின் புனிதத் தன்மை பாதுகாக்கப் பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஆயர்கள், காரணம் கண்டறிய முடியாத கொலைகள் மற்றும் அதிகரித்து வரும் அக்கறையின்மை குறித்தும், ஏழைகள் இவற்றால் பாதிக்கப்படும்போது இடம்பெறும் மௌனம் குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர்.
தாங்கள் செய்யும் செயலின் விளைவுகளுக்கான பொறுப்பேற்காத நிலை என்பது சமூகத்தின் அறநெறி சார்ந்த கட்டமைப்பை வலுவிழக்கச் செய்கிறது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அவமதிப்புகள், சகிப்புத்தன்மையின்மை மற்றும் அரசியலால் தூண்டப்பட்ட வன்முறைகளால் பொது விவாதங்கள் வலுவிழந்து வரும் போக்கை விமர்சித்துள்ள ஆயர்கள், அமைதியற்ற சூழலில் இளைஞர்கள் பயன்படுத்தப்படுவதைக் கண்டித்து பொறுப்பான தலைமைத்துவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
சமய நிறுவனங்களால் நடத்தப்படும் மருத்துவமனைகளுக்கு நிதி வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதம் மற்றும் திறன் சார்ந்த கல்வி முறையை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள கென்ய ஆயர்கள், இது தொடர்பாக விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளனர்.
வரவிருக்கும் 2027 ஆம் ஆண்டு இடம்பெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ள கென்ய நாட்டின் ஆயர் பேரவை, மக்கள் அனைவரையும் குறிப்பாக இளைஞர்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளுமாறு ஊக்குவித்துள்ளது.
சவாலான சூழல் தொடர்கின்ற போதிலும், மாண்பு நிறைந்த மற்றும் அமைதியான சமூகத்தை உருவாக்க ஒற்றுமை, நீதி மற்றும் கூட்டு நடவடிக்கைக்கு ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்