துபாஸ் நகரில் இஸ்ரேலிய இராணுவம் அவ்வப்போது நடத்தி வரும் இராணுவ நடவடிக்கைகள் துபாஸ் நகரில் இஸ்ரேலிய இராணுவம் அவ்வப்போது நடத்தி வரும் இராணுவ நடவடிக்கைகள் 

எருசலேம் திருஅவை நில ஆக்கிரமிப்பு: சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி!

தயாசிர் மற்றும் ஹமாம் இல்-மலே ஆகிய பகுதிகளில் திருஅவை நிலங்களில் அண்மையில் நடந்த ஆக்கிரமிப்புகள் குறித்து, அறக்கட்டளைத் துறை அதிகாரிகள் ஏப்ரல் 23 அன்று இராணுவ மற்றும் குடிமை அதிகாரிகளுடன் கள ஆய்வு நடத்தினர். அங்கு நடந்த தாக்குதல்கள் மற்றும் சேதங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

எருசலேமின் இலத்தீன் வழிபாட்டு முறையின் முதுபெரும் தந்தை இல்லத்தின் அறக்கட்டளைத் துறை, திருஅவைக்குச் சொந்தமான நிலங்களில், அண்மையில் குடியேறியவர்கள் மேற்கொண்ட அத்துமீறல்கள் குறித்து கலந்தாலோசிக்க, ஏப்ரல் 23, வியாழனன்று தயாசிர் மற்றும் ஹமாம் இல்-மலே ஆகிய இடங்களில் இராணுவ மற்றும் குடிமைச் சமூக அதிகாரிகளுடன் ஒரு கள ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது உள்ளூர் மக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் முதுபெரும் தந்தை இல்ல நிலங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து அறக்கட்டளைத் துறை அதிகாரப்பூர்வ புகாரை அளித்துள்ளது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, நிலத்தை அழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கனரக இயந்திரங்களைப் பறிமுதல் செய்வது மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

மேலும், இத்தகைய விதிமீறல்கள் திருஅவையின் சொத்துக்கள் மீதான தெளிவான அத்துமீறல் என்று குறிப்பிட்டு இந்த நிகழ்வுகளை வன்மையாகக் கண்டித்துள்ள முதுபெரும் தந்தை இல்லம், சேதங்களை உடனடியாக அகற்றவும், மேலும் ஊடுருவல்கள் நடக்காமல் தடுக்கவும், நிலங்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இப்பிரச்சினையின் தீவிரத்தை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி சட்ட நடவடிக்கைகளைத் தொடர உறுதியளித்துள்ளனர். இத்தகைய செயல்பாடுகளின் மூலம் முதுபெரும் தந்தை இல்லம் உள்ளூர் சமூகங்களுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், அவர்களின் மாண்பு, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான தனது அர்ப்பணிப்பை வலியுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் நிலை குறித்து அறிந்துள்ள எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பித்சபாலா, அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவும் உரிய பாதுகாப்பு வழங்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருஅவையின் சொத்துக்களைப் பாதுகாப்பது என்பது ஒரு 'மீறப்படக்கூடாத எல்லை' என்று அறக்கட்டளைத் துறை வலியுறுத்தியதுடன், அவற்றைப் பாதுகாக்கவும் உள்ளூர் மக்களுக்கு ஆதரவளிக்கவும் அனைத்து சட்ட மற்றும் நிர்வாக முயற்சிகளையும் தொடரப்போவதாக உறுதியளித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஏப்ரல் 2026, 13:05