சூரத் தானி மறைமாவட்டத்தின் நீண்டகால மறுவாழ்வுப் பணிகள் தீவிரம்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
தாய்லாந்தின் சூரத் தானி (Surat Thani) பகுதியில் 2025 நவம்பரில் ஏற்பட்ட கோர வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கத்தோலிக்க திருஅவை இடைவிடாது நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
300 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் நிகழ்வு என்று அதிகாரிகளால் விவரிக்கப்பட்ட இந்த பேரழிவால் 6,30,000-க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் வேலைவாய்ப்பையும் வீடுகளையும் இழந்து தவிப்பதால், நிவாரணப் பணிகளை விட அவர்களின் எதிர்கால வாழ்வைச் சீரமைக்கும் நீண்ட கால மீட்பு நடவடிக்கைகளே இப்போது அவசியம் அம்மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளர் பேரருள்திரு ஜான் பாப்டிஸ்ட் அமோர்ன்கிட் ப்ரோம்பக்டீ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
சூரத் தானி மறைமாவட்டத்தின் ஆயரான பால் டிரைராங் முல்ட்ரி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், திருஅவையானது காரிதாஸ் அமைப்பின் உதவியுடன், குறிப்பாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சோங்க்லா மாகாணத்தில் உள்ள ஐந்து பங்குகளில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்குத் தொடர்ந்து உதவி வருகிறது.
மேலும் அருள்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, உதவிகளை வழங்கி வருவதோடு, தற்போதையத் தேவைகளையும் மதிப்பிட்டு வருகின்றனர்.
தற்போது வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பைச் சீரமைத்தல் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு முயற்சியாக, எட்டு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நிலையான உணவு உற்பத்தியை மேம்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
துயரங்களுக்கு மத்தியிலும், திருஅவையின் ஆன்மீக மற்றும் பொருளுதவியுடன் மக்கள் தங்கள் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பி வருகின்றனர்.
பீதேஸ் செய்தி நிறுவனம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்