திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம்  

திருத்தந்தையின் ஆப்பிரிக்கப் பயணம்: ஆன்மீகப் புதுப்பித்தலுக்கும் பொறுப்புணர்வுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பு

கிறிஸ்தவர்கள் செயலற்றுக் காத்திருக்காமல், உறுதியான அர்ப்பணிப்புடன் இறையரசுப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதே இந்தப் பயணத்தின் மையச் செய்தியாகும்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஏப்ரல் 23, வியாழனன்று ஆப்பிரிக்க  நாடுகளுக்கான தனது திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்துள்ள திருத்தந்தை, திருஅவை மற்றும் சமூகம் ஆகிய இரண்டிற்கும் "ஆழ்ந்த புதுப்பித்தல்" பற்றிய செய்தியை விட்டுச் சென்றுள்ளார் என்று ஈக்வேட்டோரியல் கினியாவில் உள்ள மங்கோமோ (Mongomo) மறைமாவட்டத்தின் ஆயர் ஜுவான் டொமிங்கோ பெகா எசோனோ அயாங் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தையின் இந்த வருகையானது, 'நாம் அனைவரும் இணைந்து பெற்ற ஆசி' என்றும், எதிர்காலத்தை நோக்கிய 'ஒரு மாபெரும் பொறுப்புணர்வுக்கான அழைப்பு' என்றும் ஒரு நேர்காணலில் ஆயர் அயாங் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவர்கள் செயலற்றுக் காத்திருப்பதை விடுத்து, உறுதியான செயல்கள் மூலம் இறையரசுப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதே திருத்தந்தையின் விருப்பம் என்று குறிப்பிட்டுள்ள ஆயர் அயாங் அவர்கள், மனித மாண்பு, செயலில் வெளிப்படும் நற்செய்தி மற்றும் அமைதியை வளர்த்தெடுக்கும் பண்பாடு ஆகியவற்றையே திருத்தந்தையின் வருகை முக்கிய கருப்பொருள்களாகக் கொண்டிருந்தது என்றும் கூறியுள்ளார்.

வெவ்வேறு கலாச்சாரங்கள் ஒன்றிணைவதே உண்மையான ஒற்றுமையாகும் என்று குறிப்பிட்டுள்ள ஆயர் அயாங் அவர்கள், பன்முகத்தன்மையை மதிக்கும் ஒரு நல்லிணக்கத்தை நாம் வளர்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்தந்தை பாட்டா (Bata) சிறைக்குச் சென்ற நிகழ்வை ஒரு 'உன்னதத் தருணம்' என்று வர்ணித்த ஆயர் அயாங் அவர்கள், இந்தச் செயல் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் கைதிகளும் இறைவனின் பார்வையில் மறக்கப்படாதவர்கள்' என்பதை இச்செயல் உறுதிப்படுத்தியது என்றும், அத்தோடு, சிறைவாசிகள் தங்களை மாற்றிக்கொண்டு அமைதியின் பாதையில் நடக்க இச்சந்திப்பு உத்வேகம் அளித்தது என்றும் ஆயர் குறிப்பிட்டார்.

ஐந்து மறைமாவட்டங்களைக் கொண்டுள்ள உள்ளூர் திருஅவை, தனது எதிர்காலப் பயணத்தை 'தயாராகுதல், ஏற்றுக் கொள்ளுதல், வாழ்வாக்குதல்' என்ற மூன்று நிலைகளில் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆயர் அயாங் அவர்கள், இதன் மூலம் திருத்தந்தை தந்து சென்ற ஆசீர்வாதத்தை ஒரு தொடர்ச்சியான ஆன்மீகப் புதுப்பித்தலாக மாற்ற அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்றும் எடுத்துக்காட்டினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 ஏப்ரல் 2026, 13:43