தேடுதல்

அன்னாபாவில் திருத்தந்தை அன்னாபாவில் திருத்தந்தை   (ANSA)

திருத்தந்தையை புனித அகுஸ்தினாரின் புதல்வராக வரவேற்கும் அல்ஜீரிய மக்கள்!

திருத்தந்தை அவர்களின் அணுகுமுறை, குறிப்பாக அமைதி மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடலை ஊக்குவிப்பதில் அவர் காட்டும் ஆர்வம், புனித அகுஸ்தினாரின் உயரிய விழுமியங்களை அப்படியே பிரதிபலிக்கிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

அல்ஜீரியாவில் உள்ள புனித அகுஸ்தினார் துறவற சபையின் தலைவரான அருள்பணி வெகேசா அவர்கள், அன்னாபாவிற்கு திருத்தந்தை வருகை புரிந்தது‌ குறித்து மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், இந்த வருகை கிறிஸ்தவர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து அல்ஜீரியர்களுக்கும் ஒரு கொண்டாட்டமான தருணம் என்று குறிப்பிட்டார்.

வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், அங்கு நிலவும் சூழல்,பரவலான மகிழ்ச்சியைத் தருவதாக அருள்பணியாளர் வெகேசா அவர்கள் விவரித்தார். மதங்களைக் கடந்து மக்கள் அனைவரும் திருத்தந்தையை அன்புடன் வரவேற்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ, திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்களிடையே ஏற்பட்ட உற்சாகத்தை நினைவு கூர்ந்த அவர், இஸ்லாமிய சமூகங்கள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி, அவரை புனித அகுஸ்தினாரின் ஆன்மீகப் புதல்வராக அங்கீகரித்ததை முன்னிலைப்படுத்தினார்.

மேலும் புனித அகுஸ்தினார் இந்தப் பகுதியிலேயே பிறந்து, ஆயராகப் பணியாற்றி, காலமானார் என்பதால், அவருடைய பாரம்பரியம் தொடர்ந்து மக்களை ஒன்றிணைக்கிறது என்றும், இது புனித அகுஸ்தினாரை அல்ஜீரியாவின் வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளத்தின் ஒரு அங்கமாக மாற்றியுள்ளது என்றும் அருள்பணியாளர் வெகேசா அவர்கள் விளக்கினார்.

திருத்தந்தையின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வருகையை ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவினருக்கான நிகழ்வாக மட்டும் பார்க்காமல், ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருத வேண்டும் என்று அருள்பணியாளர் வெகேசா அவர்கள் வலியுறுத்தினார். இது வெறும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கான சந்திப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் கிடைத்த பெருமையாகும்.

அல்ஜீரிய அரசு திருத்தந்தையை முறைப்படி வரவேற்ற அதே வேளையில், உள்ளூர் அகஸ்தீனியர்கள் அவரை ஒரு வெளிநாட்டுத் தலைவராகப் பார்க்காமல், தங்களில் ஒருவராகக் கருதி மிகுந்த உரிமையுடன் வரவேற்றனர்.

இந்த அன்பான வரவேற்பு, அவர்கள் அனைவரும் புனித அகுஸ்தினாரின் ஆன்மீகப் பாரம்பரியத்தில் ஆழமாகப் பிணைந்திருப்பதை உலகிற்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

திருத்தந்தை அவர்களின் அணுகுமுறை, குறிப்பாக அமைதி மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடலை ஊக்குவிப்பதில் அவர் காட்டும் ஆர்வம், புனித அகுஸ்தினாரின் உயரிய விழுமியங்களை அப்படியே பிரதிபலிக்கிறது என்று அருள்பணியாளர் வெகேசா அவர்கள் குறிப்பிட்டார்.

திருத்தந்தை தனது வார்த்தைகள் மற்றும் செயல்களின் மூலம், பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒற்றுமை, சுமூகமான புரிதல் மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கத் தொடர்ந்து முயற்சி செய்கிறார் என்றும், அவரது இந்த வருகையானது, புனித அகுஸ்தினார் விட்டுச் சென்ற அந்த மகத்தான ஆன்மீகப் பாரம்பரியத்தை அவர் இன்றும் மிகச்சிறப்பாகத் தொடர்வதையே சுட்டிக்காட்டுகிறது, என்றும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 ஏப்ரல் 2026, 10:40