சூழலியல் மாற்றத்திற்கும் பொறுப்புணர்வுக்கும் பேராயர் ஷெவ்சுக் அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
இஸ்ரயேல் மக்கள் வாக்குறுதி அளிக்கப்பட்ட நாட்டை அடைய நாற்பது ஆண்டுகள் பாலைவனத்தில் பயணம் செய்தது போல, நாமும் கடந்த நான்கு தசாப்தங்களாகச் செர்னோபில் பேரழிவின் சுமையைச் சுமந்து வருகிறோம் என்று பேராயர் ஸ்வியாட்டோஸ்லாவ் ஷெவ்சுக் (Sviatoslav Shevchuk) அவர்கள் கூறினார்.
செர்னோபில் அணு உலை பேரழிவின் 40-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந்நிகழ்வில் பங்கேற்ற உக்ரைனிய திருஅவை உறுப்பினர்களுக்கு வழங்கிய செய்தியில் உக்ரைனிய கிரேக்க கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பேராயர் ஷெவ்சுக் அவர்கள் இவ்வாறு கூறினார்.
செர்னோபில் அணு உலை பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பேராயர் ஷெவ்சுக் அவர்கள், அந்தத் துயரத்தின் விளைவுகள் மற்றும் அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை நினைவுகூர்ந்ததுடன் எதிர்காலத்தில் இத்தகைய பேரழிவுகள் நிகழாமல் தடுக்க 'சுற்றுச்சூழல் மாற்றம்' (Ecological Conversion) மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
செர்னோபில் பேரழிவு என்பது வெறும் தொழில்நுட்பத் தவறு மட்டுமல்ல, அது மனிதனின் ஆன்மீகக் குருட்டுத்தன்மை மற்றும் அறநெறிப் பொறுப்பற்றத் தன்மையின் விளைவாகும் என்று கூறிய பேராயர் ஷெவ்சுக் அவர்கள், இன்று, உக்ரைன் மீண்டும் போர்த் தீயில் எரிந்து கொண்டிருக்கும் வேளையில், அதே தியாக உணர்வை நம் வீரர்களிடமும் மீட்புப் பணியாளர்களிடமும் காண்கிறோம் என்றும் எடுத்துரைத்தார்.
போரின் தொடக்கத்தில் செர்னோபில் அணுமின் நிலையம் ஆக்கிரமிக்கப்பட்டதும், சப்போரிஜியா (Zaporizhzhia) அணுமின் நிலையத்திற்குத் தொடரும் அச்சுறுத்தலும், கடந்த காலப் பாடங்களை அனைவரும் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகின்றன என்பதையும் பேராயர் சுட்டிக்காட்டினார்.
செர்னோபில் மற்றும் தற்போதைய போர் ஆபத்துக்களைச் சுட்டிக்காட்டியுள்ள திருஅவை, எதிர்காலப் பேரிடர்களைத் தவிர்க்க மனிதகுலம் 'சுற்றுச்சூழல் மனமாற்றத்தை' அடைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அணு விபத்தின் போது கதிரியக்கத்தை நீக்கத் தன் உயிரைத் தியாகம் செய்த மீட்புப் பணியாளர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் நன்றியுடன் நினைவுகூர திருஅவை அழைப்பு விடுத்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்