தேடுதல்

கூட்டத்தில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள்  

உரோமையில் ஒன்றுகூடிய 13 நாடுகளைச் சேர்ந்த பெண்கள்!

இந்த நிகழ்வு திருஅவையிலும் சமூகத்திலும் பெண்களின் தனித்துவமான தலைமைப் பங்கை வலுப்படுத்திய அதேவேளை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சனைகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் விதமாக பங்கேற்பாளர்களை அதிகம் ஊக்கப்படுத்தியது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மார்ச் 09, திங்கள்கிழமையன்று, 13 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் உரோமையில் ஒன்றுகூடி தலைமைத்துவம் மற்றும் உலகளாவியச் சவால்கள் குறித்து விவாதித்தனர் என்று செய்திக் குறிப்பொன்று தெரிவித்துள்ளது.

"நம்பிக்கை கொண்ட பெண்கள் : எதிர்காலத் தலைவர்களாக உருவெடுக்கும் மாணவர்கள்" என்ற கருப்பொருளில், பிரித்தானிய மற்றும் ஆஸ்திரேலிய தூதரகங்கள் திருப்பீடத்திற்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் இந்தப் பெண்கள் பங்கேற்றனர்.

மார்ச் 08, ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலகப் பெண்கள் தினத்திற்கு அடுத்த நாள் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 15 பெண்கள் நம்பிக்கை, மதிப்பீடுகள் மற்றும் தலைமைத்துவம் குறித்து விவாதித்தனர்.

அமைதியைக் கட்டமைத்தல், வறுமை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற உலகளாவியச் சவால்களை எதிர்கொள்வதில் பெண்களுடைய தலைமைத்துவத்தின் முக்கிய பங்களிப்பை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டியது.

கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவின் தூதரக அதிகாரிகள் இந்த நிகழ்வில் திருப்பீடத்திற்காக  உரையாற்றினர். அப்போது வேலை, குடும்பம் மற்றும் ஆன்மிகத்தை சமநிலைப்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர்.

சிறப்பாக இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய கனடா நாட்டிற்கான அரசுத் தூதர் ஜாய்ஸ் நேப்பியர் அவர்கள், பல பணிகளை நிர்வகிப்பதற்கான தனது அணுகுமுறையால் பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்தினார்.

அடுத்து கென்யாவைச் சேர்ந்த மேரி வாங்கிதி முகோ அவர்கள், பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். 

இறுதியாக, கொலம்பியாவைச் சேர்ந்த டேனிலா நினோ கிரால்டோ அவர்கள், மனித வர்த்தகத்தை எதிர்ப்பதில், பெண் தலைவர்களுக்கான சமூகம் மற்றும் இணைப்பின் மதிப்பீடுகளை வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வு திருஅவையிலும் சமூகத்திலும் பெண்களின் தனித்துவமான தலைமைப் பங்கை வலுப்படுத்திய அதேவேளை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் விதமாக பங்கேற்பாளர்களை அதிகம் ஊக்கப்படுத்தியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 மார்ச் 2026, 13:07