தேடுதல்

வழிபாட்டின்போது கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் வழிபாட்டின்போது கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள்  

இலங்கையில் இயேசு சபை அருள்பணியாளருக்கு இரங்கல்!

இறைபதமடைந்த அருள்பணியாளர் பீரிஸ் அவர்கள், மதங்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்திற்காக துலானா ஆராய்ச்சி மையத்தையும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்காக கல்வி மையம் ஒன்றையும் நிறுவியுள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

இலங்கை மக்களால் அலாய் என அன்போடு அழைக்கப்படும் இயேசுசபை அருள்பணியாளர் அலோசியஸ் பீரிஸ் அவர்கள் நெடுநாள் உடல் நலக்குறைவிற்கு பின் தனது 91-வது வயதில் இறைபதமடைந்த நிலையில் அந்நாட்டு மக்கள் அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தியதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ச் 24, செவ்வாயன்று நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் ஏராளமான இலங்கை மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காகவும் இறைவேண்டல் செய்தனர் என்று கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

பௌத்த-கிறிஸ்தவ மதங்களுக்கு இடையேயான உரையாடலில் ஒரு முன்னணி ஆளுமையாக விளங்கிய அருள்பணியாளர் பீரிஸ் அவர்கள், மதப் பிரிவினைகளைக் கடந்து ஒன்றிப்பு, நீதி மற்றும் புரிதலை மேம்படுத்துவதற்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஓர் உறவுப் பாலமாக நினைவு கூரப்படுகிறார்.

அருள்பணியாளர் பீரிஸ் அவர்கள், மதங்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்திற்காக துலானா ஆராய்ச்சி மையத்தையும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்காக கல்வி மையம் ஒன்றையும் நிறுவியுள்ளார்.

கல்வியாளராக உலக அளவில் மதிப்புப் பெற்ற அருள்பணியாளர் பீரிஸ் அவர்கள், கேம்பிரிட்ஜ், லண்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் கற்பித்துள்ளார். மேலும் 20-க்கும் மேற்பட்ட நூல்களையும், 300-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ள இவர், பௌத்த ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பௌத்தர் அல்லாத கத்தோலிக்க அருள்பணியாளர் ஆவார்.

அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற பல்வேறு மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவரும், அவரது எளிமையான வாழ்க்கை முறை மற்றும் சமூக நீதிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தினர். பௌத்த மதத்தின் மெய்யறிவை கிறிஸ்தவ நடைமுறையுடன் இணைத்த அவரது பணி, இலங்கையிலும் அதற்கு அப்பாலும் உள்ள சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

1934-ஆம் ஆண்டு பிறந்த அருள்பணியாளர் பீரிஸ்‌ அவர்கள், 1953-ஆம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்து, 1965-ஆம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். மதங்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான அவரது பங்களிப்புகளால் அவரது பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 மார்ச் 2026, 13:28