வன்முறையை நியாயப்படுத்தப் போலி-மத மொழி பயன்படுத்தப்படுகிறது!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
மத்திய கிழக்கில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்களுக்கு மத்தியில், போரை நியாயப்படுத்த கடவுளின் பெயரைப் பயன்படுத்துவது மிகப்பெரிய பாவம் என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை பேராயர் பியர்பத்திஸ்தா பித்தசபாலா அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
மார்ச் 15, ஞாயிறன்று இடம்பெற்ற இணையவழி கருத்தரங்ம் ஒன்றில் உரையாற்றிய பேராயர் பித்தசபாலா அவர்கள், "போர் என்பது அரசியல் மற்றும் பொருள்சார் நலன்களால் தூண்டப்படுகிறது" என்றும், "வன்முறையை நியாயப்படுத்தப் போலி-மத மொழி (pseudo-religious language) பயன்படுத்தப்படுகிறது" என்றும் எச்சரித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக திருமறை நூல்களை மேற்கோள் காட்டி அண்மையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளைக் குறிப்பிட்டுள்ள பேராயர் பித்தசபாலா அவர்கள், "போருக்காக மதத்தைப் பயன்படுத்துபவர்களுடன் கடவுள் இல்லை, மாறாக, துன்பப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்களின் மத்தியில்தான் கடவுள் இருக்கிறார்" என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் அழைப்புகளை வழிமொழிந்துள்ள பேராயர் பித்தசபாலா அவர்கள், அதேவேளையில், இத்தகைய கோரிக்கைகள் செவிசாய்க்கப்படாமல் போகலாம் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் "வன்முறை என்பது பேரச்சத்தையும் வெறுப்பையும் மட்டுமே உருவாக்கும்" என்று கூறியுள்ள பேராயர் பித்தசபாலா அவர்கள், "போருக்கு எதிராக, திருஅவைத் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டு"ம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
காசாவில் நிலவும் மோசமான மனிதாபிமானச் சூழலையும், மேற்கு கரையில் மோசமடைந்து வரும் நிலைமைகளையும் சுட்டிக்காட்டியுள்ள பேராயர் பித்தசபாலா அவர்கள், "அங்குள்ள மக்கள் பரவலாக இடப்பெயர்வுக்கும், பேரழிவிற்கும் உள்ளாகி இருப்பதோடு, அடிப்படைத் தேவைகளைப் பெறுவதிலும் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகச் செய்திகள் பொதுமக்களின் புரிதலை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்கு வகிப்பதாக எடுத்துக்காட்டியுள்ள பேராயர் பித்தசபாலா அவர்கள், இந்த மோதல் குறித்துத் துல்லியமான மற்றும் விமர்சனப்பூர்வமான செய்திகளை வழங்குமாறு பத்திரிகையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்