திருவரங்கம் பங்கின் முதல் பங்குத் தந்தைக்கு சிறப்பு மரியாதை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிப்ரவரி 27, வெள்ளிக்கிழமை, சிவகங்கை மறைமாவட்டம் திருவரங்கம் பங்கின் முதல் பங்குத்தந்தையாக 20 ஆண்டுகள் பணி செய்து திரு இருதய ஆண்டவருக்கென ஓர் ஆலயம் கட்டி இந்த கிராமத்தை உருவாக்கியவரான ஸ்டீபன் லெபோர்த் என்ற இயற்பெயர் கொண்ட முடியப்பர் சுவாமி அவர்களின் நினைவு நாளை பங்கு இறை மக்கள் நன்றி உணர்வோடு கொண்டாடினர்.
தங்கள் கிராம வளர்ச்சிக்கும் இறை நம்பிக்கைக்கும் அடித்தளமிட்ட பிரான்ஸ் நாட்டில் பிறந்து இயேசு சபை குருவாக இம்மண்ணிற்கு வந்து இறைப்பணி செய்த முடியப்பர் சுவாமி அவர்களின் மீது கொண்ட நன்றி உணர்வால் ஒவ்வொரு ஆண்டும் இறந்த அனைத்து ஆன்மாக்கள் நினைவு நாள் அன்று அவரது கல்லறை முன் கூடி செபிக்கின்றனர். மேலும் தங்களின் குடும்பத்தில் இறந்தவர்களுக்காக ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் முதல் பெயராக முடியப்பர் சுவாமி அவர்களின் பெயர் இடம் பெறுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு அவருக்கு ஒரு நினைவகம் கட்டப்பட்டதை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளான பிப்ரவரி 25-ஆம் நாள் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு கடந்த புதன்கிழமையன்று இந்த விழாவினை இரண்டாவது ஆண்டாக கிராம மக்கள் கொண்டாடினர்.
இந்நிகழ்வு பற்றி கருத்துத் தெரிவித்த பங்குத்தந்தை அருள்பணி. M.R. ஜேசு அவர்கள், "புளிப்பற்ற அப்ப விழா பற்றி மோசே ஆரோனுக்கு ஆண்டவராகிய கடவுள் எடுத்துரைத்த போது "இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக" என்று உரைத்தார். திருவரங்கம் பங்கின் தொடக்கப் புள்ளி இந்தப் பங்கில் பணிபுரிந்த முடியப்பர் சுவாமி. இந்த ஊருக்கும் இந்த ஊர் சார்ந்த உறவுகளுக்கும் என்றும் நினைவில் நிற்கும் நபராக நெஞ்சில் நினைவில் கொண்டாடப்படுகின்ற நபராக என்றும் திகழ்கிறார் . அவர் வித்திட்ட நம்பிக்கை விதை விருட்சமாக வளர்ந்து உயர்ந்து படர்ந்து இருப்பது மகிழ்வானது. இதுவரை அவரது நினைவை மக்கள் கல்லறையில் நின்று செபித்தும், கல்லறைக்கு மலர் அணிவித்து பூக்கள் தூவியும் கொண்டாடி வந்தார்கள். இப்போது அவருக்கென்று ஒரு நினைவகம் எழுப்பப்பட்டு ஆண்டுதோறும் நினைவு கொண்டாட்டமாக ஒரு விழாவாக மாறியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய பெயர் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும். அவர் இந்த ஊருக்கு செய்த அனைத்தும் என்றும் நினைவில் நிற்கும், நிலைத்து நிற்கும், இந்த ஊர் சார்ந்த உறவுகளால் போற்றப்படும்" என்று கூறினார்.
இந்த நிகழ்வில் கிராம மக்கள் அனைவரும் முடியப்பர் சுவாமியின் நினைவகத்தின் முன்பு கூடி நிற்க திருவரங்கம் பங்கின் மூத்த அருள்பணியாளரான தந்தை I. அருள், சே.ச., அவர்கள் திருவரங்கம் கிராம மக்கள் முடியப்பர் சுவாமியின் மீது கொண்டிருக்கும் அன்பையும் நன்றி உணர்வையும் நினைவுகூர்ந்து தொடக்க இறைவேண்டல் செய்தார். பிறகு பங்குத் தந்தை அருள்பணி. M.R. ஜேசு அவர்கள், திரு இருதய மேல்நிலைப் பள்ளி தாளாளரும் முடியப்பர் மாணவர் இல்லத்தின் இயக்குநருமான அருள்பணி. சகாயம், உதவிப் பங்குத் தந்தை அருள்பணி. பிரான்சிஸ் பால் MIC, அருள்பணி. I. அருள் சே.ச., அருள்பணி. ஆரோக்கியசாமி ஆகியோர் அவரது கல்லறைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பிறகு அருள்பணி. ஆரோக்கியசாமி அவர்கள் நிறைவேற்றிய திருப்பலி மறையுறையின்போது முடியப்பர் சுவாமி அவர்கள் இந்த கிராமத்தை உருவாக்க தானே வரைபடம் வரைந்து மிக நேர்த்தியாக கிராமத்தின் தெருக்களை வடிவமைத்தது குறித்து எடுத்துரைத்தார். இவ்வளவு வளர்ச்சியை பெற்றிருக்கும் இந்தக் கிராமத்தில் விசுவாசத்திற்கான விதையிட்ட முதலில் பங்கு தந்தையான முடியப்பர் சுவாமியின் நினைவகத்திற்கு வந்து இறை மக்கள் செபிக்கும் போதெல்லாம் அவரைத் தொடர்ந்து இம்மண்ணின் வளர்ச்சிக்காகப் பணியாற்றிய அனைத்துப் பங்குத்தந்தையருக்காகவும் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
மேலும் நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களை விட அவர்கள் நமக்குக் கற்றுத்தந்த ஆழமான இறை நம்பிக்கையே போற்றத்தக்கது என்று கூறி முன்னோர்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
இச்சிறப்புத் திருப்பலியில் திருவரங்கம் பங்கில் பணியாற்றும் அமலவை அருள் சகோதரிகளும் லெயூகா அருள்சகோதரிகளும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். திருப்பலிக்கு பிறகு மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியில், உறவின் விருந்தோடு இந்த விழா நிறைவுற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்