தேடுதல்

ஈரானில் போர் பாதிப்பு ஈரானில் போர் பாதிப்பு   (ANSA)

மத்திய கிழக்கில் அமைதி நிலவ இந்திய ஆயர் பேரவை சிறப்பு இறைவேண்டல்!

மார்ச் 13, தவக்காலத்தின் மூன்றாம் வாரம் வெள்ளிக்கிழமையை, அமைதிக்கான தவக்கால உணர்வோடும் இறைவேண்டலோடும் விசுவாசிகள் நோன்பு நாளாகக் கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

"மத்திய கிழக்கில் அமைதி நிலவ மார்ச் 8-ஆம் தேதியை ஒரு சிறப்பு இறைவேண்டல் தினமாக இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (CCBI) ஒருங்கிணைத்துள்ளது.

மார்ச் 8 முதல் மார்ச் 14 வரை அன்னை கன்னி மரியாவின் பரிந்துரையை வேண்டி, விசுவாசிகள் அனைவரும் தினமும் ஜெபமாலை செபிக்குமாறு இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கோவா-டாமன் பேராயரும், இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் பிலிப் நேரி பெராவ் அவர்களால் கையொப்பமிடப்பட்டு பீதேஸ் செய்தி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 13, தவக்காலத்தின் மூன்றாம் வாரம் வெள்ளிக்கிழமையை, அமைதிக்கான தவக்கால உணர்வோடும் இறைவேண்டலோடும் விசுவாசிகள் நோன்பு நாளாகக் கடைபிடிக்குமாறு ஆயர்கள் அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

"மத்திய கிழக்கில் பதற்றமும் வன்முறையும் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில், அமைதிக்காக ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்யவும், மன்றாடவும் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த கத்தோலிக்கத் தலத்திருஅவையினருக்கும் அழைப்பு விடுத்துள்ள ஆயர்கள், "போரினாலும் நிலையற்ற சூழலினாலும் ஏற்படும் துயரங்கள் ஒட்டுமொத்த மனித குலத்தையுமே பாதிக்கின்றன," என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, மத்திய கிழக்கில் பல இந்தியர்கள் வாழ்ந்து வருவதை எடுத்துக்காட்டியுள்ள கர்தினால் பெராவ் அவர்கள், 'தொலைவில் இருந்தபடியே தங்கள் குடும்பங்களை ஆதரிப்பதோடு, திருஅவையின் வாழ்விற்கும் நமது நாட்டின் வளர்ச்சிக்கும் அவர்கள் தாராளமாகப் பங்களிக்கிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்."

மேலும் "நிச்சயமற்ற இந்தச் சூழலில், அவர்களை நாம் இறைவனின் பாதுகாப்பில் சிறப்பாக ஒப்படைத்து, அவர்களின் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் அமைதிக்காக இறைவேண்டல் செய்வோம்" என்று கூறியுள்ளார் கர்தினால் பெராவ்.

"மார்ச் 8, ஞாயிறன்று, மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைத்துக் கத்தோலிக்கக் கோவில்களிலும் திருப்பலிகள் கொண்டாடப்பட வேண்டும்" என்று இந்திய ஆயர்கள் விண்ணப்பித்துள்ளதை அந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.

"பகைமை முடிவுக்கு வரவும், அப்பாவி மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்படவும், உலகத் தலைவர்கள் விவேகத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயல்படவும் வேண்டி, பங்குத் தளங்கள் தங்களின் விசுவாசிகளின் மன்றாட்டுகளில் இந்தக் கருத்துகளைச் சேர்த்துக் கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்" என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

"நமது ஒன்றிணைந்த இறைவேண்டல், தவம் மற்றும் ஒன்றிப்பு யாவும் எல்லாம் வல்ல இறைவனின் திருமுன் பணிவான, அதேவேளையில் உருக்கமானதொரு மன்றாட்டாக அமையட்டும்" என்றும், "இதன் வழியாக உள்ளங்கள் மாற்றம் பெறவும், பகைமை ஒழியவும், அமைதி தழைத்தோங்கவும் வேண்டுகிறோம்" என்றும் கூறி தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 மார்ச் 2026, 13:08