பாகிஸ்தானில் ஒன்றிணைந்த கிறிஸ்தவ இஸ்லாமியத் தலைவர்கள்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
"பாகிஸ்தானில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய தலைவர்கள், தவக்காலம் மற்றும் இரமலான் ஆகிய புனித காலங்களில் அமைதிக்காக ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்து, மதங்களுக்கு இடையிலான ஒன்றிப்பை ஒரு வலிமை வாய்ந்த வெளிப்பாடாக முன்வைத்தனர்" என்று பீதேஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலாகூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாத்சாகி மசூதியில் இடம்பெற்ற கூட்டு இஃப்தார் ( Joint Iftar )விருந்துடன் கூடிய இந்தச் சந்திப்பு, குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நிலவி வரும் மோதல்களுக்கு மத்தியில், ஒன்றிப்பு மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்றும் அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமைதியை மேம்படுத்துவதில் நோன்பு, இறைவேண்டல் மற்றும் தர்மம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுள்ள இலாகூர் உயர்மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளர் ஆசிப் சர்தார் அவர்கள், "இந்த நடைமுறைகள் கடவுள் மீதான நமது பக்தியிலும், பொது நலனுக்கான நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பிலும் நம்மை ஒன்றிணைக்கின்றன" என்று கூறினார்
இலாகூரில் உள்ள அமைதி மையத்தின் இயக்குநரான அருள்பணி டொமினிகன் ஜேம்ஸ் சன்னன் மற்றும் அந்த மசூதியின் தலைவர் அப்துல் கபீர் ஆசாத் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் கிறிஸ்தவ-இஸ்லாமிய உறவுகளை வலுப்படுத்தவும், பாகிஸ்தானின் நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரவும் இறைவேண்டல் செய்யவும் அழைப்பு விடுத்தனர்.
மேலும், மசூதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பைத் தவிர, கத்தோலிக்கச் சமூகத்தினர் அமைதி வேண்டி திருவிழிப்பு இறைவேண்டல்களையும் (Prayer vigils) நடத்தினர். இதில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைதி முயற்சிகளுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் சமூகத் தொடர்பு ஆணையத்தின் நிர்வாகச் செயலாளரான அருள்பணி கைசர் பெரோஸ் அவர்களின் தலைமையில் புனித பியோ கோவிலில் மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலமும் இடம்பெற்றது.
இந்த முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், எல்லைப் பகுதியில் வன்முறை தொடர்ந்து நீடிக்கிறது என்றும் தலிபான் நிலைகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் மற்றும் 415 போராளிகளின் உயிரிழப்பு குறித்து பாகிஸ்தான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது என்பதையும் பீதேஸ் செய்தி நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளது.
மேலும் மார்ச் 1, இஞ்ஞாயிறன்று, இடம்பெற்று நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில் இந்த மோதல்கள் குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை, உடனடியாக பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்ததுடன், உலகம் முழுவதும் அமைதி நிலவவும் இறைவேண்டல் செய்யுமாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்