தேடுதல்

கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் ரபேல் சாக்கோ கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் ரபேல் சாக்கோ  (AFP or licensors)

பாக்தாத் கர்தினால் சாக்கோ பணித் துறப்பு!

தனது பதவிக் காலத்தில், கல்தேய திருஅவையின் ஒன்றிப்பைப் பாதுகாக்கவும், ஈராக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஈராக்கிலும் வெளிநாட்டிலும் தனது இருப்பைப் பேணவும் கர்தினால் சாக்கோ அவர்கள் அயராது உழைத்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் ரபேல் சாக்கோ அவர்கள் தனது பணியைத் துறப்பு செய்துள்ளதாகவும், அவரின் இந்த முடிவை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடினமான காலங்களிலும், ஏராளமான சவால்களுக்கு மத்தியிலும் கல்தேய கத்தோலிக்கத் திருஅவையை வழிநடத்தியது குறித்த தனது 13 ஆண்டுகால அர்ப்பணம் நிறைந்த பணிகள் பற்றி மனம்மகிழ்ந்து தான் எழுதியுள்ள கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் சாக்கோ.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதவி விலகுவது குறித்து யோசித்த 75 வயது நிரம்பிய கர்தினால் சாக்கோ அவர்கள், தனது பணித் துறப்பு என்பது தன்னிச்சையான முடிவு என்றும், வெளிப்புற அழுத்தம் காரணமாக அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் தனது இறுதி ஆண்டுகளை இறைவேண்டல், எழுத்து மற்றும் எளிய பணிகளில் செலவிட விரும்புவதாகவும் அந்தக் கடிதத்தில் தனது விருப்பத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார் கர்தினால் சாக்கோ.

தனக்குப் பின் இந்தப் பணிக்குப் பொறுப்பேற்கவிருக்கும் தனது வாரிசுக்கு உறுதியான இறையியல் அறிவு, துணிவு, ஞானம் மற்றும் புதுப்பித்தல் மற்றும் உரையாடலுக்கான அர்ப்பணிப்பு இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் கர்தினால் சாக்கோ.

குறிப்பாக, தனது உயிலின் விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், 52 ஆண்டுகால தனது அருள்பணியாளர் சேவையில் தான் சேமித்ததையும், மொசூலில் உள்ள தனது குடும்ப வீட்டை விற்றதையும் உள்ளடக்கிய தனது சாதாரண சொத்துக்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, தனது உண்மையான செல்வம் என்பது பணியின்மீதான தனது அர்ப்பணிப்பிலும், தான் எழுதிய பல நூல்கள் மற்றும் கட்டுரைகளிலும்தான் அடங்கியுள்ளது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார் கர்தினால் சாக்கோ.

தனது பதவிக் காலத்தில், கல்தேய திருஅவையின் ஒன்றிப்பைப் பாதுகாக்கவும், ஈராக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஈராக்கிலும் வெளிநாட்டிலும் தனது இருப்பைப் பேணவும் கர்தினால் சாக்கோ அவர்கள் அயராது உழைத்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சவாலான காலங்களில் கர்தினால் சாக்கோ அவர்களின் அடிச்சுவட்டில் கல்தேய சமூகத்தைப் பாதுகாத்து வழிநடத்தக்கூடிய அவருக்கு அடுத்து வருபவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கி உள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 மார்ச் 2026, 13:12