படிப்பினைகள் வழங்கும் இயேசு படிப்பினைகள் வழங்கும் இயேசு  

தடம் தந்த தகைமை : விண்ணரசு புதையலுக்கு ஒப்பாகும்!

உலகம் காட்டும் நுகர்வு, தேவைக்கு அதிகமாகச் சேர்த்தல், கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தல், பதுக்கல், சுரண்டல் போன்ற யாவும் இம்மண்ணுக்குள் நிலவும் இறையாட்சியை இறுக்க மூடி வைத்துள்ளன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்" (மத் 13:44)

பூமியைப் பாதுகாப்புப் பெட்டகமாகப் பார்க்கும் பழக்கம் யூதர்களுக்கு இருந்தது. பூமியே பணத்தைப் பத்திரப்படுத்தி வைக்கும் வங்கி என்றொரு யூதப் பழமொழியும் உண்டு. பாலஸ்தீன விவசாயிகள் நிலத்தை மிகவும் கனமாகவும் எதிர்பார்ப்புடனும் உழுவர். அதற்குக் காரணம் தங்கள் மூதாதையர் ஏதேனும் புதையலை அந்நிலத்தடியில் மறைத்து வைத்திருக்கக் கூடும் என்பதே. இறையாட்சியை மிகவும் கவனமாக எதிர்பார்க்க வேண்டியுள்ளது.

பெரியவற்றைப் பெற சிரியவற்றை இழந்துதான் ஆக வேண்டும். இதுவும் வேண்டும் அதுவும் வேண்டும் என்றால் எதுவும் சேராது. இறையாட்சி என்னும் நிறைநிலையைப் பெற நமக்குள் உலவும் சிறு இன்பங்களைக் களைந்தே ஆக வேண்டும். உலகம் காட்டும் நுகர்வு, தேவைக்கு அதிகமாகச் சேர்த்தல், கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தல், பதுக்கல், சுரண்டல் போன்ற யாவும் இம்மண்ணுக்குள் நிலவும் இறையாட்சியை இறுக்க மூடி வைத்துள்ளன. நல்லவற்றையும் நல்லவரையும் வெளிக்கொணரும் பொறுப்பு நமதே.

இறைவா! சமூகத்தில் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட மனிதப் புதையல்களைக் கண்டெடுத்து கைகோர்த்து வாழ வழிகாட்டும்.

"உம் வாக்கின் வழியிலே" என்னும் நூலிலிருந்து அருள்பணி. பெனடிக்ட் M.D. ஆனலின்  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 மார்ச் 2026, 13:58