மத்திய கிழக்கில் அமைதி நிலவ ஆசிய ஆயர்கள் அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
"மத்திய கிழக்கில் உடனடியாகப் போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அழைப்பொன்றை விடுத்துள்ளனர் ஆசிய ஆயர்கள்.
மேலும் தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்தப் போரினால் உலகளாவிய ரீதியில் கடுமையான மானுட மற்றும் பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட வன்முறைகள் குறித்து ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு (FABC) தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது."
"அமைதி என்பது வன்முறையின் மூலம் அல்லாமல், பேச்சுவார்த்தையின் மூலமே ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள ஆயர்கள், இந்தப் போர் எளிய மற்றும் விளிம்புநிலை மக்கள்மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் போர் மேலும் தீவிரமடைவதைத் தடுத்தல், மோதல்களுக்குத் தீர்வு காண மீண்டும் தூதரகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல் மற்றும், மனித உயிர்களைப் பாதுகாக்க மதங்களுக்கு இடையேயான ஒன்றிப்பை ஊக்குவித்தல் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் ஆயர்கள்.
இறுதியாக, ஆசியாவில் உள்ள தலத் திருஅவைகள் அமைதிக்காக இறைவேண்டல் செய்யவும், ஒருமைப்பாட்டுடன் செயல்படவும் கேட்டுக்கொண்டுள்ள ஆயர்கள், ஏழை எளியோர் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களின் ஆதரவையும் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்