உப்பாகவும் ஒளியாகவும் .... உப்பாகவும் ஒளியாகவும் ....  (©RVA 2021)

பொதுக் காலம் 5-ஆம் ஞாயிறு : உப்பாகவும் ஒளியாகவும் வாழ்வோம்!

நமது நற்செயல்களைக் கண்டு பிறர் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழும் அளவிற்கு நமது ஒளி மனிதர் முன் ஒளிரட்டும். சாரமுள்ள உப்பாய் சான்று பகர்ந்து வாழ்வோம்.
பொதுக் காலம் 5-ஆம் ஞாயிறு : உப்பாகவும் ஒளியாகவும் வாழ்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I.     எசா 58: 7-10      II.   1 கொரி  2: 1-5    III.  மத்   5: 13-16)   

பொதுக் காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக் கிழமையைக் கொண்டாடுகின்றோம். இன்றைய வாசகங்கள் நாம் உப்பாகவும் ஒளியாகவும் வாழ்ந்திட நமக்கு அழைப்பு விடுகின்றன. இப்போது நற்செய்தி வாசகத்திற்கு செவிமடுப்போம். இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.” ‘நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்’ மற்றும்’ நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்’ (மத் 5:13-14) என்று இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் வார்த்தைகள் குறித்தும், இயேசுவின் சீடர்களாகிய நமக்கு இந்த உருவகங்கள் என்ன சொல்கின்றன என்பதைக் குறித்தும் இப்போது சிந்திப்போம்.

உலகிற்கு உப்பு நாம்

உணவுக்கு சுவையூட்ட உப்பு பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத மூலப்பொருள்தான் எல்லாவற்றுக்கும் சுவையைத் தருகிறது. இந்த காரணத்திற்காக, பண்டைய காலங்களிலிருந்து, உப்பு ஞானத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. என்ன மாதிரியான ஞானத்தை இது எடுத்துக்காட்டுகிறது? இயேசு நற்பேறுகள் குறித்து கற்பித்த உடனே, அவர் உப்பு பற்றிய இந்த உவமையை எடுத்துக்காட்டுகிறார். அப்படியானால், நற்பேறுகள்தாம் கிறிஸ்தவ வாழ்க்கையின் உப்பு என்பதை நாம் காண்கிறோம். ஏனென்றால், அவை விண்ணகத்தின் ஞானத்தை பூமிக்குக் கொண்டுவருகின்றன. அவை இந்த உலகத்தின் தரமான வளர்ச்சியிலும் நமது வழக்கமான சிந்தனை முறையிலும் புரட்சியை ஏற்படுத்துகின்றன. ஆசீர்வதிக்கப்படுவதற்கும், மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருப்பதற்கும், நாம் செல்வந்தர்களாகவும் வலிமைவாய்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கக்கூடாது, ஆனால் பணிவு, மனத்தாழ்மை மற்றும் இரக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும்; யாருக்கும் தீமை செய்யாமல், அனைவருக்கும் அமைதியைக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நற்பேறுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

ஒரு சீடரின் ஞானமே நம்மைச் சுற்றியுள்ள உலகத்திற்குச் சுவையைத் தருகிறது என்று இயேசு நமக்குக் கூறுகிறார். ஆகவே, இயேசுவின் ஞானத்தை நாம் கடைபிடிக்கத் தொடங்கினால், நாம் நமது சொந்த வாழ்க்கைக்கு மட்டுமல்ல, சமுதாய மற்றும் நமது நாட்டின் வாழ்க்கைக்கும் சுவையாக இருப்போம். உப்பு உணவைப் பாதுகாக்கிறது. இதன் காரணமாக உப்பு, கடவுளுடனான நமது உறவைப் பாதுகாப்பதற்கான நமது அடிப்படைத் தேவையை நினைவூட்டுகிறது. மேலும் இயேசுவின் ஒவ்வொரு சீடரும், இவுலகின் உப்பாகவும், கடவுள் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கு சான்றாகவும் இருக்கிறார் என்பதும் இதன் பொருளாகிறது. இவ்வுலகின் உப்பாக, நாம் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் கடவுளுடனான உடன்படிக்கைக்குச் சான்றுபகரவும் நாம் அழைக்கப்படுகிறோம், இதன் வழியாக  நட்பு மற்றும் சகோதரத்துவ வாழ்க்கையின் பிணைப்புகளை உருவாக்கும் திறன் கொண்டவர்கள் என்பதை நாம் காட்டுகிறோம்.

மன்னிப்பின் உப்பை நம் காயங்களுக்குப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வோம். காயங்களில் உப்பைத் தடவியதும் அது அக்காயத்தை எரியச்செய்யும், ஆனால், அதுவே அதனை நலமாக்கும். கடவுள் நம்மை அன்புகூர்வது போல நாமும்  ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவரையொருவர் நேர்மையுடனும் தாராள மனப்பான்மையுடனும் அன்புகூர்வோம். நம்மிடம் இருக்கும் நல்லதைப் போற்றுவோம், தீமையால் நம்மை நாமே சிதைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டாம்.

உலகிற்கு ஒளி நாம்

இரண்டாவதாக, உலகத்தின் ஒளியாகிய இயேசு, தம் சீடர்களும் இவ்வுலகின் ஒளியாகத் திகழவேண்டுமென கூறுகிறார். அதாவது, நாம் கிறிஸ்துவின் ஒளியைப் பெறும்போது, ​​நாமும் ஒளிரும் கிறிஸ்துவின் ஒளியாகி அதனைப் பரவச் செய்கின்றோம். இயேசு தொடர்ந்து, “மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்” என்கின்றார். உலகத்திற்கு ஒளியாக இருக்க வேண்டும் என்று இயேசு கேட்டுக்கொண்டதன் வழியாக அவருடைய சீடர்களாகிய நாமும், மலையின் மீது அமைக்கப்பட்ட நகரத்தைப் போலவும், அணையாத விளக்கைப் போலவும் சுடர்விட அழைக்கப்பட்டுள்ளோம். ஆகவே, கிறிஸ்துவின் ஒளியால் இவ்வுலகைப் பற்றி எரியச்செய்வோம்.

இதைத்தான்,  “பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் ‘இதோ! நான்’ என மறுமொழி தருவார். உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக் காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்” என்று இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா கூறுகின்றார்.

பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம். 35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஓர் உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா. உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து தனக்குப்போக தானம் என்பதை மாற்றிக் காட்டினர் பாலம் ஐயா. ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்துகொள்ள 7 ஆண்டுகள் நடைபாதை வாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லூரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார். வாழ்நாள் முழுவதும் ஒரு சென்ட் நிலம், ஒரு ஓலை குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து திருமண வாழ்வையும் தியாகம் செய்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ‘A Most Notable intellectual’ in the World என்ற பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.

பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து அவர்கள் சென்னை மையப்பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை ஐயாவிற்கு பரிசாக அளித்தார். ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என அப்பரிசை ஏற்றுக்கொள்ள பணிவுடன் மறுத்துவிட்டார். ஐ.நா சபை விருது 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர். பாலம் ஐயாவைப் பற்றிய ஆவணப்படம் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பரிசு பெற்றது. பாலம் ஐயா மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவச் செலவிற்காக மக்களிடம் ஒரு ரூபாய் வேண்டினார். இவரது வேண்டுகோளை மதித்து மேயர், சபாநாயகர், கவர்னர் மட்டுமல்லாமல் அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் ஒரு ரூபாய் அனுப்பினார்கள். கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்குக் கிடைக்காத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயேசுவின் சீடர்கள் உலகின் உப்பாக இருக்கின்றனர் என்றால், அதன் பொருள் என்ன? சீடர்கள் உலகின் ஒரு பகுதியாய், ஒரு முக்கியப் பகுதியாய் கலந்து, கரைந்து வாழ்கிறார்கள். தாங்களே உலகின் மையம், நடுநாயகம் என்று வாழவதில்லை. உணவில் அளவோடு கரையும் உப்பைப்போல், சீடர்களும் உலகில் அளவோடு கரைந்து வாழ்கின்றனர். அளவுக்கதிகமாய் உலகோடு கரைந்தால், உலகம் அவர்களால் பயன்பெறப் போவதில்லை. உலகிற்கு மருந்தாகவும், உலகை அழிவிலிருந்து காக்கவும் சீடர்கள் கருவிகளாக இருக்கின்றனர். நீங்கள் உப்பாக, ஒளியாக இருக்க வேண்டும் என்றோ, உப்பாக, ஒளியாக மாறுங்கள் என்றோ இயேசு கூறவில்லை. "நீங்கள் உப்பாக, ஒளியாக இருக்கிறீர்கள்" என்று நமக்கு நமது பணியை நினைவுபடுத்துகிறார். உலகின் உப்பு, ஒளி நாம் என்று மலைமீது நின்று உலகெல்லாம் கேட்கும்படி இயேசு பெருமையுடன் பறை சாற்றியுள்ளார். நம்மீது இயேசு கொண்டிருக்கும் இந்தப் பெரும் எண்ணங்களுக்கு ஏற்ப உப்பாக, ஒளியாக வாழ்வோம்.

ஒரு மனிதர் மனித ஞானத்தை விடுத்தது இறை ஞானத்தில் நம்பிக்கொள்ளும்போது உப்பாகவும் ஒளியாகவும் வாழ்வது எப்படி என்று அறிந்துகொள்கிறார். இதைத்தான் புனித பவுலடியாரின் வாழ்வில் பார்க்கின்றோம். "கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை. நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே" என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுகின்றார் அவர். ஆகவே நமது நற்செயல்களைக் கண்டு பிறர் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழும் அளவிற்கு நமது ஒளி மனிதர் முன் ஒளிரட்டும். சாரமுள்ள உப்பாய் சான்று பகர்ந்து வாழ்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 பிப்ரவரி 2026, 13:26