புனித பூமியில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அக்டோபர் 7 தாக்குதல்கள் மற்றும் காசாவில் நடந்த போரின் தொடர்ச்சியான விளைவுகளை மேற்கோள் காட்டி, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான நம்பிக்கையை மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கைகளை வலியுறுத்தினார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் பியெர்பத்திஸ்தா பித்சபாலா.
உரோமையில் புனித பிரான்சிஸ் அசிசியாரின் 800-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வு ஒன்றில் பேசியபோது இவ்வாறு கூறிய கர்தினால் பித்சபாலா அவர்கள், "அமைதி மற்றும் ஒப்புரவு, உறுதியான செயல்கள், அடையாளங்கள் மற்றும் சான்றுகளுடன் இல்லாவிட்டால் வெறும் முழக்கங்களாகவே எஞ்சியிருக்கும் ஆபத்து உள்ளது" என்று எச்சரித்தார்.
மோதலின் போது தான் காசாவிற்கு நான்கு முறை சென்றதாக விவரித்த கர்தினால் பித்சபாலா அவர்கள், பேரழிவு, மனித துன்பங்கள் மற்றும் அங்கு வாழ்பவர்களின் மீள்தன்மை ஆகியவற்றைக் குறித்தும் தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார்.
புனித பூமியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதையும், மேற்குக் கரையில் எதிர்கொள்ளும் சவால்களையும், காசா மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாட்டு அரசு தீர்வைச் சுற்றியுள்ள சிரமங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
“போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு வார்த்தைகள் மட்டுமே போதாது” என்று கூறிய கர்தினால் பித்சபாலா அவர்கள், "பழிவாங்குவதை விட தொலைநோக்கை வளர்க்கும் அரசியல் மற்றும் மதத் தலைமையும், மக்கள் வித்தியாசமாகப் பார்க்க படிப்படியாக உதவும் உரையாடலுக்கான வாய்ப்புகளும் நமக்குத் தேவை" என்று சுட்டிக்காட்டினார்.
புனித பூமிக்குத் திருப்பயணங்கள் மேற்கொள்ளுமாறு திருப்பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்த கர்தினால் பித்சபாலா அவர்கள், “உடல்ரீதியான இருப்பு இப்பகுதிக்கான திருஅவையின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது” என்று கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்