மனித வர்த்தகத்திற்கு எதிராக பிலிப்பீன்ஸ் ஆயர்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மனித வர்த்தகத்திற்கு எதிராக வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்குமாறு மறைமாவட்டங்களை வலியுறுத்தியுள்ள பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை, "இது நாட்டில் ஒரு தீவிரமான மற்றும் தொடர்ச்சியான பிரச்சனை" என்று சுட்டிக்காட்டிள்ளது.
"சட்டவிரோத ஆள்சேர்ப்பு மற்றும் கட்டாய உழைப்பு முதல் பாலியல் சுரண்டல் மற்றும் குழந்தைகளை இணைய வழியில் முறைகேடுகளில் ஈடுபடுத்துவது வரை மனித வர்த்தகம் பரவலாக உள்ளது" என்றும், "குறிப்பாக, மெட்ரோ மணிலா போன்ற நகர்ப்புறங்களில் இது பரவலாக உள்ளது" என்றும் ஆயர்கள் எச்சரித்துள்ளனர்.
"வயது வந்த பெண்களும், வயது வராத சிறுமிகளுமே பொதுவாக அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள்" என்றும், "ஏமாற்றும் இணையவழி ஆள்சேர்ப்பு மூலம் எண்மமுறை (டிஜிட்டல்) தளங்கள் கடத்தலை எளிதாக்கியுள்ளன" என்றும் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், வறுமை, கல்வியின்மை, மோதல்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் ஆகியவை பாதிப்பை அதிகரிக்கும் முக்கிய காரணிகளாக எடுத்துக்காட்டியுள்ளனர்.
மனித வர்த்தகத்தை முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கண்டித்ததற்கு இணங்க, வலுக்குறைந்த மக்களைப் பாதுகாப்பதில் திருஅவையின் தார்மீக மற்றும் சமூக உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், தலத்திருஅவை-அரசு ஒத்துழைப்பு மற்றும் நாடு முழுவதும் மறைமாவட்ட மனித வர்த்தக எதிர்ப்புக் குழுக்களை உருவாக்குதல் அல்லது வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்