நைஜீரியா படுகொலைகள் நாட்டின் எதிர்காலத்தை அச்சுறுத்துகின்றன!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நைஜீரியாவில் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வரும் படுகொலைகள் நாட்டை தார்மீக மற்றும் நிறுவன சரிவை நோக்கித் தள்ளுவதாக, சொகோட்டோவின் கத்தோலிக்க ஆயர் மேத்யூ ஹசன் குகா அவர்கள் எச்சரித்துள்ளார்.
அடமாவா மாநிலத்தின் யோலாவில் பேசிய ஆயர் குகா அவர்கள், "வேறு எந்த நாடும் இதுபோன்ற வழக்கமான அளவிலான வன்முறையை அனுபவிப்பதில்லை" என்றும், "இப்படிப்பட்ட சூழல்களின் கீழ் நைஜீரியா எவ்வாறு தொடர் வளர்ச்சியை எட்ட முடியும்" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்முறையை முதன்மையாக மத அடிப்படையில் வடிவமைக்கும் முயற்சிகளை விமர்சித்துள்ள ஆயர் குகா அவர்கள், இதுபோன்ற விவரிப்புகள் பிளவுகளை ஆழப்படுத்துவதாகவும் சமூகங்களுக்கு இடையே அவநம்பிக்கையைத் தூண்டுவதாகவும் எடுத்துக்காட்டியுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களின் மத அடையாளங்களை வலியுறுத்துவதன் மூலம் மேற்கத்திய ஊடகங்கள் குறுங்குழுவாத விளக்கங்களை வலுப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் ஆயர் குகா.
அரசியல் மற்றும் நிறுவன ரீதியான பதிலுக்கு அழைப்பு விடுத்துள்ள ஆயர் குகா அவர்கள், "அரசு நிறுவனங்களை வலுப்படுத்தவும், பாதுகாப்பையும் நீதியையும் உறுதி செய்யவும், தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் தேசிய, மத மற்றும் சமூகத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இறுதியாக, கூட்டுப் பொறுப்பும், மதவெறியை நிராகரிக்கும் தன்மையும் இல்லாவிட்டால், நைஜீரியா அதன் தார்மீக திசையை இழக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார் ஆயர் குகா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்