தேடுதல்

மனித வர்த்தகம் மனித வர்த்தகம்  

மனித வர்த்தகத்திற்கு எதிராக இந்தோனேசியத் தலத்திருஅவை!

இந்தோனேசியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கிழக்கு நுசா தெங்காராவை ஒரு முக்கிய மனித வர்த்தக மையமாக அடையாளம் கண்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில் மட்டும் இங்கு 256 வழக்குகள் பதிவாகியுள்ளன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தோனேசியாவிலுள்ள கிழக்கு நுசா தெங்காராவின் சிக்கா பகுதியில் உள்ள உள்ளூர் சட்டப்பேரவையில் கத்தோலிக்க அருள்பணியாளர்கள் மற்றும் அருள்சகோதரிகள் உட்பட மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டமைப்பு போராட்டம் ஒன்றை நடத்தியதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஜாவாவிலிருந்து குறைந்தது 13 பெண்களைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஓர் இரவு விடுதியின் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கூட்டமைப்பு கோரியுள்ளதாகவும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

இருப்பினும், இந்தப் பெண்கள் சட்டப்பூர்வ வயதுடையவர்கள் என்றும் சட்டப்பூர்வ வழிமுறைகள் மூலம் இவர்கள் பணியமர்த்தப்பட்டவர்கள் என்றும் கூறி இரவு விடுதி போலி ஆவணங்களை உருவாக்கியதாகக் அக்கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகவும், சிலர் கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும்  தெரிவித்துள்ள அக்கூட்டமைப்பு, பாதிக்கப்பட்ட ஒருவர், தனது ஒப்பந்தத்திற்கு எதிராக ஆண் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், விருந்தினர்களில் ஒரு காவல் அதிகாரியால் அவர் பாலியல் முறைகேடு செய்யப்பட்டதாகவும் விவரித்துள்ளது.

இதுபற்றி கருத்துத் தெரிவித்துள்ள லெடலெரோ நிறுவனத்தின் அருள்பணியாளர் ஓட்டோ குஸ்டி மதுங் அவர்கள்,"தொழிலதிபர்களை அரசு வெற்றிபெற விடக்கூடாது" என்று கூறி, சுரண்டலை நிறுத்துமாறு அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் கிழக்கு நுசா தெங்காராவை ஒரு முக்கிய மனித வர்த்தக மையமாக அடையாளம் கண்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில் மட்டும் இங்கு 256 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனாலும் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக ஆர்வலர்கள் நம்புகின்றனர், பல வழக்குகள் பதிவு செய்யப்படாமல் போகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 பிப்ரவரி 2026, 13:01