தென்கிழக்கு நைஜீரியாவில் தீப்பற்றி எரிந்த கத்தோலிக்கக் கோவில்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"பிப்ரவரி 26, வியாழக்கிழமையன்று அதிகாலையில் தென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க வழிபாட்டுத் தலம் ஒன்று தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளது பீதேஸ் எனப்படும் செய்தி நிறுவனம்.
இந்தச் சம்பவம் கிராஸ் ரிவர் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போகி உள்ளூர் அரசுப் பகுதியில் அமைந்துள்ள கட்சுவான் இருவானில் உள்ள புனித மரியா கத்தோலிக்கக் கோவிலைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதல் அதிகாலை 3:00 மணியளவில் நடந்ததாக கூறப்படுவதாகவும் தெரிவித்துள்ளது அச்செய்தி நிறுவனம்.
"தீயை அணைத்து அருகிலுள்ள கட்டிடங்களுக்குப் பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் உடனடியாக செயலில் இறங்கிய போதிலும், அவ்வழிபாட்டுத் தலம் பெரும் சேதத்தை சந்தித்தது" என்றும், "கணிசமாக பாதிக்கப்பட்ட பொருட்களில் நற்கருணைப் பேழை மற்றும் பல புனித பொருட்கள் அடங்கும்" என்றும் உரைத்துள்ளது அச்செய்திக் குறிப்பு.
மேலும் "இந்தத் தாக்குதலின் போது, அப்பங்குத் தளத்தின் பங்குத் தந்தை அலுவலகத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன" என்றும் குறிப்பிட்டுள்ளது அச்செய்தி நிறுவனம்.
"இதற்குக் காரணமானவர்களை கைது செய்ய காவல்துறையினர் பெரிய அளவிலான தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்" என்றும், "முதற்கட்ட விசாரணைகளின்படி, தீ வைத்தவர்கள் கோவிலின் திருப்பொருள் அறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆவணங்களைக் குறிப்பாகக் குறிவைத்து எரித்துள்ளனர்" என்றும் கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
இறுதியாக, இந்தத் தாக்குதலுக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது பீதேஸ் செய்தி நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்