இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் 37-வது பொதுக்குழுக் கூட்டம்  இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் 37-வது பொதுக்குழுக் கூட்டம்  

அரசியலமைப்பு விழுமியங்களைக் காக்க இந்திய ஆயர் பேரவை அழைப்பு!

பிளவுகள் நிறைந்த உலகில் உரையாடல், அமைதி மற்றும் சமூக ஒன்றிப்பு நிலவ வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஆயர்கள், இந்தியாவின் அரசியலமைப்பு அறநெறிமுறைகளின்படி பொதுநலனுக்காக உழைப்பதாகவும் உறுதி ஏற்றனர் அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

பிப்ரவரி 4 முதல் 10 வரை பெங்களூருவில் நடைபெற்ற 37-வது பொதுக்குழு கூட்டத்தைத் தொடர்ந்து, இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCI) ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டது. நம்பிக்கையும் தேசமும்: இந்தியாவின் அரசியலமைப்புப் பார்வைக்குத் திருஅவையின் சாட்சி" என்பதே இக்கூட்டத்தின் மையப்பொருளாக அமைந்தது.

இக்கூட்டத்தில், இன்றைய காலக்கட்டத்தில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் அரசியல் பிரிவினைகளுக்கு மத்தியில், கிறிஸ்தவர்கள் தங்களது விசுவாசத்தைத் துணிவுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை.

மேலும், இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் தங்களின் அடையாளத்தில் உறுதியாக நிலைத்திருக்கவும், தங்களின் ஆன்மிகப் பாரம்பரியத்திலிருந்து வலிமையைப் பெறவும், கிறிஸ்துவின் அர்ப்பணிப்புள்ள சீடர்களாகவும் இந்தியாவின் பொறுப்புள்ள குடிமக்களாகவும் இருக்குமாறு இந்திய ஆயர்கள் அழைப்பு விடுத்தனர்.

நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் உடன் பிறந்த உறவை நிலைநிறுத்தும் இந்திய அரசியலமைப்பிற்குத் தங்களின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய ஆயர்கள், மேலும் அதிகரித்து வரும் பாகுபாடுகள், குறிப்பாக, தலித் கிறிஸ்தவர்களுக்கு எதிரான பாரபட்சம் குறித்துத் தங்களது கவலையை வெளிப்படுத்தினர்.

மதச் சுதந்திரம் மற்றும் தனியுரிமையைச் சிதைக்கும் சட்டங்களுக்கு எதிராகத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்த ஆயர்கள், மேலும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினர்.

தொடர்ந்து இளைஞர்களிடையே தலைமைத்துவப் பண்பை வளர்க்க வேண்டியதன் தேவையை எடுத்துக் காட்டிய ஆயர்கள், குடிமையியல் கல்வி மற்றும் அறநெறிமுறை சார்ந்த சமூக ஈடுபாட்டிற்காகத் தங்களின் ஆதரவை  வெளிப்படுத்தினர்.

மேலும், இளைஞர்கள் பொதுவாழ்விலும் அரசியலிலும் ஈடுபட்டு, அதை ஒரு சேவையாகச் செய்ய வேண்டும் என்று அவர்களை ஊக்குவித்த ஆயர்கள், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மனப்பாங்கு, ஏழைகளின் முன்னேற்றம் மற்றும் திருஅவையின் நிறுவனங்களுக்குள்ளும் சமூகத்திலும் நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் அறநெறிமுறை சார்ந்த நிர்வாகத்தை மேம்படுத்துவதில் திருஅவையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

பிளவுகள் நிறைந்த உலகில் உரையாடல், அமைதி மற்றும் சமூக ஒன்றிப்பு நிலவ வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஆயர்கள், இந்தியாவின் அரசியலமைப்பு அறநெறிமுறைகளின்படி பொதுநலனுக்காக உழைப்பதாகவும் உறுதி ஏற்றனர். 

இறுதியாக, தங்களின் இந்தப் பணிகளைத் தூய ஆவியாரின் வழிநடத்தலிலும், அன்னை மரியாவின் பரிந்துரையிலும் ஒப்படைத்து இக்கூட்டத்தை நிறைவு செய்தனர் இந்திய ஆயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 பிப்ரவரி 2026, 13:03