தேடுதல்

படிப்பினைகள் வழங்கும் இயேசு படிப்பினைகள் வழங்கும் இயேசு  

தடம் தந்த தகைமை : மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று!

விழிப்புணர்வும் ஆவியானவரின் தூண்டுதலுக்குச் செவிமடுத்தலும் நல்ல தலைமையின் முக்கியப் பண்புகள்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” (லூக் 4:21)

ஆண்டவரின் வாக்கு அதீத சக்திமிக்கது. அடிமைப்பட்ட மக்களின் விடுதலைக்கான விதைகளைத் தூவிக்கொண்டிருப்பது. எனவேதான், இயேசு ஆளும் வர்க்கத்தால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட ஏழையர், சிறைப்பட்டோர், மாற்றுத்திறனாளர், ஒடுக்கப்பட்டோர் யாவரும் விடியலைக் காண்பர் என்ற செய்தியை விழிப்புணர்வாக்கினார். இறைவார்த்தை வாசிப்பதற்கும், ஒலிப்பதற்கும், கேட்பதற்கும் வெறுமனே பார்வைக்கும் ஆனதல்ல; வாழ்வாக்கப்படவேண்டியது. அது கேட்போரின் உள்ளத்தை ஊடுருவி புதுச்சிந்தனைக்கும், செயலுக்கும் அறைகூவல் விடுப்பது.

ஏற்றத்தாழ்வும் ஏகாதிபத்தியமும் கோலோச்சிய அச்சூழலில், 'வாக்கு மனிதர் ஆன' (யோவா 1:14) இயேசு ஒரு விடுதலைப் போராளியாகக் கனன்றெழுந்தார். அந்த விடுதலைத் தன் வழியாக விழுதாகிறதெனச் சூளுரைத்தார்.  அதில் இருளெனும் சமூக ஒடுக்கல்கள் உடைபடப்போவதை உறுதிப்படச் சொன்னார். எப்போதெல்லாம் இறைவார்த்தை நம் உள்ளம் நுழைகிறதோ அப்போதெல்லாம் நமக்குள் ஆவியாரின் அசைவாடல் நிகழ்கிறது. அந்த அசைதல் ஈடுபாடான இறையாட்சி நோக்கி நம்மை ஈர்க்கும். அந்த ஈர்ப்புக்கு நாம் ஈடுகொடுக்கின்றோமா என்பதே கேள்வி.

இறைவா! உம் வாக்கு செவிமடுத்து செயலாக்கப்படவேண்டியது. இதனைப் புரிந்து வாழ, வாழ்வளிக்க வலிமை தாரும்.

"உம் வாக்கின் வழியிலே"  என்னும் நூலிலிருந்து அருள்பணி பெனெடிக் M.D. ஆனலின்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 பிப்ரவரி 2026, 12:48