ஆஸ்திரேலிய ஆயர் பேரவை (கோப்புப் படம்) ஆஸ்திரேலிய ஆயர் பேரவை (கோப்புப் படம்)  

ஆஸ்திரேலியக் கத்தோலிக்கர் பொது நலனுக்காகச் செயல்பட அழைப்பு!

ஆஸ்திரேலிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் இந்த அறிக்கையானது, பரவலான உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் நிதி நெருக்கடி, குறிப்பாகப் மாநிலப் பகுதிகளில் நிலவுவதைக் காட்டும் மக்களின் நேரடி அனுபவங்களையும் ஆராய்ச்சிகளையும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

ஆஸ்திரேலியாவின் வாழ்க்கைச் செலவு நெருக்கடி குறித்து, அரசுகள், வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் பொது நலனுக்காகச் செயல்படுமாறு வலியுறுத்தி, ஆஸ்திரேலியக் கத்தோலிக்க ஆயர்  பேரவை (ACBC) இரண்டு சமூக நீதி அறிக்கைகளில் முதலாவதை வெளியிட்டுள்ளது.

"பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை வெறும் புள்ளிவிவரங்களாக மட்டுமே பார்க்கவேண்டாம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ள ஆஸ்திரேலிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் திமோதி ஜான் காஸ்டெல்லோ அவர்கள், "இந்தப் பொருளாதார இன்னல்களுக்கு 'நம்பிக்கை, எதிர்பார்ப்பு மற்றும் அன்பு' ஆகியவற்றுடன் பதிலளிக்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு இந்த அறிக்கை அழைப்பு விடுக்கிறது" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்,"வாழ்க்கைச் செலவு உயர்வினால், உணவைக் குறைத்துக் கொள்ளவும், மருத்துவச் சிகிச்சையைத் தள்ளிப்போடவும் அல்லது பாதுகாப்பான இருப்பிடம் இன்றித் தவிக்கவும் பலர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்" என்று  குறிப்பிட்டுள்ளார் பேராயர் காஸ்டெல்லோ

கத்தோலிக்கச் சமூகப் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு மனித மாண்பு, ஒருமைப்பாடு மற்றும் ஏழைகளுக்கான முன்னுரிமை ஆகியவற்றை வலியுறுத்தியுள்ள அந்நாட்டு ஆயர்கள், தற்போதைய சூழல் பல ஆஸ்திரேலியர்களின் மாண்பு நிறைந்த வாழ்க்கையைப் பாதிப்பிற்குள்ளாக்குவதாக மேலும் கவலை தெரிவித்துள்ளனர்.

வறுமையை ஒழிக்க தன்னார்வத் தொண்டு, நன்கொடைகள், ஆதரவு திரட்டுதல் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை ஊக்குவித்துள்ள ஆயர்கள், அதேவேளையில் வலுக்குறைந்த சமூகங்களுக்கு ஆதரவளிப்பதில் திருஅவையின் பங்கினை மீண்டும் உறுதிப்படுத்தி, கூட்டுப் பொறுப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த அறிக்கையானது, பரவலான உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் நிதி நெருக்கடி, குறிப்பாகப் மாநிலப் பகுதிகளில் நிலவுவதைக் காட்டும் மக்களின் நேரடி அனுபவங்களையும் ஆராய்ச்சிகளையும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 பிப்ரவரி 2026, 13:05