தேடுதல்

ஆயருடன் அருள்பணியாளர்களும் இளையோரும் ஆயருடன் அருள்பணியாளர்களும் இளையோரும்  

சிவகங்கையில் இளையோர் பொங்கல் விழா

"இளைஞர்கள் தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத ஒன்று கிறிஸ்தவம். கிறிஸ்தவத்தை தவிர்த்தால் நாம் ஒரு உலகளாவிய தோழமை இயக்கத்தையும் அந்த இயக்கம் கற்பிக்கின்ற சமத்துவத்தையும் இழக்க நேரிடும்" : ஆயர் லூர்து ஆனந்தம், சிவகங்கை மறைமாவட்டம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 19, திங்கள்கிழமையன்று, சிவகங்கை வியானி அருள்பணி மையத்தில் நடைபெற்ற இளைஞர் பொங்கல் விழாவில் மறைமாவட்ட ஆயர் மேதகு லூர்து ஆனந்தம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ்விழாவில் பல்வேறு பங்குகளில் இருந்தும் ஏறக்குறைய 200- க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்குபெற்றனர்.

கிறிஸ்தவம் என்பது மனித மதிப்பீடுகளின் மேல் கட்டப்பட்டு எல்லோரும் சமம் என்று அறிக்கையிடும் ஒரு பேரியக்கம் என்று  தனது தலைமை உரையில் கூறிய ஆயர் ஆனந்தம் அவர்கள், "நம் எல்லோரையும் ஒரு வித உயர்ந்த வாழ்க்கை நிலைக்கு உயர்த்தியதில் கிறிஸ்தவத்தின் பங்கு அளப்பரியது" என்றும் விளக்கினார்.

"இளைஞர்கள்தான் திருஅவையின் நிகழ்காலம்" என்று கூறிய முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றை நினைவுபடுத்தி இளைஞர்கள் திருஅவை மற்றும் சமூகத்தின் எதிர்காலத்திற்காக தங்களின் நிகழ் கால தயாரிப்புகளில் அக்கறை செலுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் ஆயர்.

சிவகங்கை மண்ணில் கிறிஸ்தவம் வேரூன்ற உழைத்த புனித அருளானந்தர் உள்ளிட்ட ஐந்து மறைபரப்பு பணியாளர்களை நினைவு கூர்ந்த ஆயர்,  இந்தியா முழுவதும், கிறிஸ்தவ நம்பிக்கையை பரப்ப இம்மண்ணிலிருந்து தான் அருள்பணியாளர்கள் சென்றுள்ளனர் என்பதையும் நினைவு படுத்தினார்.

"இளைஞர்கள் தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத ஒன்று கிறிஸ்தவம்” என்றும், “கிறிஸ்தவத்தை தவிர்த்தால் நாம் ஒரு உலகளாவிய தோழமை இயக்கத்தையும் அந்த இயக்கம் கற்பிக்கின்ற சமத்துவத்தையும் இழக்க நேரிடும்" என்றும் எச்சரித்தார் ஆயர். 

சில பத்தாண்டுகளுக்கு முன் இளைஞர்களிடையே இருந்த சமூகம் குறித்த விழிப்புணர்வும் சமூக முன்னேற்றம் குறித்த கனவும் போராடும் குணமும் தற்போது குறைந்து விட்டதாகவும், சிலர் தங்களது தலைவர்களை திரையில் தேடுகிறார்கள் என்றும் தனது கவலையினையும் பதிவு செய்தார் ஆயர்.

"இளைஞர்கள் வெளிநாட்டு மோகத்தினைத் தவிர்த்து இந்த மண்ணின் மீது பற்றுக் கொண்டு அதன் வளர்ச்சிக்காக தங்களது உழைப்பையும் அறிவாற்றலையும் பயன்படுத்த வேண்டும்" என்றும், "எங்கு சென்றாலும் இந்த மண்ணை மறந்து விடாமல் தமிழ் மொழியிலேயே உரையாட வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.

உறுதிமொழி ஏற்பு
உறுதிமொழி ஏற்பு

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் மாநில இயக்குனர் அருள்பணியாளர் கும எடிசன் அவர்கள், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மதரீதியான அடக்குமுறைகளை பற்றி விளக்கி இங்குள்ள மக்களின் ஒற்றுமையான வாழ்வை எவ்வாறு இந்த நிகழ்வுகள் பாதிக்கின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.

மேலும் கிறிஸ்தவ இளைஞர்கள் இயக்கமாக சேர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை விளக்கி அனைத்து பங்குகளிலும் இயக்கத்தை ஆரம்பித்து வாரம் ஒரு கூட்டம் நடத்துமாறும் இளையோரிடம் வேண்டுகோள் விடுத்தார் அருள்பணியாளர் எடிசன்.

தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தில் இருந்து மாநில அளவிலும் இந்திய அளவிலும் தான் பெற்ற வாய்ப்புகளைப் பற்றி பகிர்ந்து கொண்ட செல்வன் அபிசேக் ராஜா, தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் பயிற்சிகளின் மூலம் அரசியல் தெளிவு, சமூக விழிப்புணர்வு, ஆண் பெண் நிகர் நிலை போன்ற சமூக விழுமியங்களை தான் கற்றுக் கொண்டதாகக் கூறினார்.

இந்நிகழ்விற்காகப் பெரிதும் உழைத்த சிவகங்கை மறைமாவட்டத்தின் இளைஞர் பணிக்குழு செயலரான பணி ரீகன் அவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் திருமதி ஜாய்சி அவர்களுக்கும் நன்றி கூறப்பட்டது

முன்னதாக, மறைமாவட்ட நிர்வாகத் அருள்பணியாளர்களோடு வருகை தந்த மேதகு ஆயர் அவர்களை சிவகங்கை மறைமாவட்டத்தின் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலம்பம் சுற்றி வரவேற்றனர்.

தொடர்ந்து ஆயர் அவர்கள் பொங்கல் பொருட்களை மந்திரித்த பிறகு தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் கொடியினை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்த பின்னர், ஆயரின் முன்னிலையில் இளைஞர்கள் அனைவரும் இயக்கத்தின் உறுதி மொழியையும் இந்திய அரசியலமைப்பின் முகப்புரையையும் வாசித்து உறுதியேற்றனர்.

இந்நிகழ்வில் மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளர் அருள் ஜோசப், பொருளாளர் அருள்பணி. ஆரோன், செயலர் தந்தை பணி டெல்லஸ், வியானி அருள்பணி மைய இயக்குனர் பணி செபாஸ்டின், பள்ளிகளின் கண்காணிப்பாளர் பணி கிறிஸ்துராஜ் ஊடக பணிக்குழு இயக்குனர் பணி எட்வர்ட் ஆகியோர் உடன் இருந்தனர்.

இறுதியில், பாரம்பரிய பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட அனைத்து இளைஞர்களும் தங்களின் ஒற்றுமை உணர்வையும் கொண்டாட்ட மனநிலையையும் பகிர்ந்தவர்களாய் தங்கள் இல்லம் திரும்பினர்.

செய்தி வழங்கியவர் : செல்வன் அபிசேக் ராஜா

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஜனவரி 2026, 13:15